Monday, December 5, 2011

அவதூறு பேச வேண்டாம்


துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிற இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். - (நீதிமொழிகள் 17:15).
. 

ஒரு பெண் தன் பக்கத்து வீட்டு பெண்ணை பற்றி அக்கம் பக்கத்தில் ஒரு புரளியை கிளப்பி விட்டாள். அது காட்டுத்தீயை போல அந்த ஊரே பரவி விட்டது. அந்த பக்கத்து வீட்டு பெண் வெளியே தலைகாட்ட முடியாதபடி அந்த விஷயத்திற்கு கை கால் வைத்து பெரிய விஷயமாக மாற்றி விட்டனர் ஊர்க்காரர்கள். என்ன செய்வது என்று தெரியாமல் அந்த பெண் கண்ணீர் விட்டு அழுதாள். ஏன் என்னை பற்றி ஊரார் இப்படி பேசுகிறார்கள் என்று புரியாமல் தவித்தாள். கடைசியில் அந்த பெண் அந்த ஊரின் தலைமை மத போதகரிடம் சென்று காரியத்தை கூறிவிட்டு என்ன செய்வது என்று கேட்டாள். அதற்கு அவர் தான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக கூறி ஆறுதல் படுத்தி அனுப்பி விட்டார்.
.
பின் அவர் விசாரித்த போது, அது எங்கெங்கோ போய் கடைசியில் பக்கத்து வீட்டு பெண்ணில் போய் நின்றது. அந்த பெண்ணை கூப்பிட்டு, அவர் கையில் ஒரு பை நிறைய அரிசியை கொடுத்து, தான் இருக்கும் இடத்திலிருந்து அவள் வீடு வரை வழியெல்லாம் அதை போட்டு கொண்டு வர சொன்னார். பின் அடுத்த நாள் தன்னை பார்க்க வரவும் சொன்னார். அதன்படி அடுத்த நாள் அந்த பெண் அவரை பார்க்க சென்ற போது, அவர் அவளிடம், 'போய் நான் கொடுத்த அரிசியை வழியிலிருந்து பொறுக்கி கொண்டு வா' என்று கூறினார். அப்போது அவள் 'ஐயா நான் எப்படி அதை போய் கொண்டு வருவது? இந்நேரம் அநேகர் மிதித்து, அது இருந்த இடம் கூட தெரியாதே, பறவைகள் கொத்தி கொண்டு போயிருக்குமே' என்று கூறினாள். அப்போது அவர் அவளிடம், 'ஆம், அப்படித்தான் நாம் சொல்கிற ஒவ்வொரு வார்த்தைகளும்! ஒரு முறை சொல்லி விட்டால், அதை பின் பொறுக்க முடியாது. மற்றவர்களை குறித்து அவதூறாக பேசாதே, புரளியை கிளப்பி விடாதே, நாளை உனக்கும் அதே நிலைதான் வரும், திரும்ப இந்த மாதிரி காரியத்தில் ஈடுபட்டால், உனக்கு தண்டனை கொடுக்கப்படும்' என்று எச்சரித்து அனுப்பினார்.
.
பிரியமானவர்களே, நம்மில் அநேகர் பிறரை குறித்து தேவையில்லாமல் மற்றவர்களிடம் கதை பேசுகிறோம். அது அவர்களுக்கு தெரிந்தால் எத்தனை வருத்தப்படுவார்கள் என்று நாம் அதை குறித்து நினைப்பதில்லை. எப்படியாவது மற்றவர்களிடம் அவர்களை குறித்து குறைவாக பேசினால் நமக்கு ஒரு மனசாந்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை. ஒரு வேளை நாம் பேசுகிறவர் தவறே செய்யாத பட்சத்தில் அவரை குறித்து அநியாயமாக குறை பேசுவது கர்த்தருக்கு அருவருப்பானது என்று வேதம் சொல்கிறது. 'துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிற இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்'.
சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே
பாவி நீசப்பாவி நானையா
தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ
..
பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment