Thursday, December 29, 2011

கனியுள்ள ஜீவியம்


அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். - (லூக்கா 13:8-9).
.
இந்த வருடத்தின் ஆரம்பத்தை காண செய்த நம் அன்பின் தேவன் இந்த வருடத்தின் முடிவையும் காண செய்த அவரது மட்டில்லாத கிருபைக்காக அவரை முழு இருதயத்தோடும் ஸ்தோத்தரிப்போம். எத்தனையோ வாலிபர்கள், சிறுவயதுடையோர், நம்மை காட்டிலும் பலவான்களாக இருந்த அநேகர் நம்மோடு இந்த நாட்களை காணவில்லை. ஆனால் தேவன் நமக்கு அந்த கிருபையை பாராட்டி, நம்மை போஷித்து, பராமரித்து, பாதுகாத்து இந்நாள் வரை நம்மை நடத்தி வந்த அவருடைய கிருபைகளுக்காக அவரை துதிப்போமா?
.
இன்னும் இரண்டு நாட்களில் நாம் இந்த வருடத்தை கடந்த வருடம் என்று சொல்ல போகிறோம். இந்த வருடம் நம்மில் அநேகருக்கு ஒரு வேளை ஆசீர்வாதம் நிறைந்த வருடமாக இருந்திருக்கலாம், தேவன் நமக்கு நிறைவாய் கொடுத்த வருடமாக இருந்திருக்கலாம், ஒரு சிலருக்கு இந்த வருடம் தங்கள் உயிருக்குயிரானவர்களை இழக்க கொடுத்த வருடமாக இருந்திருக்கலாம், அல்லது எத்தனையோ காரியங்களை இழந்த வருடமாக இருந்திருக்கலாம். ஆனால் நம்மை இதுவரைக்கும் வழி நடத்தி வந்து, நமக்கு ஆறுதலையும் தேறுதலையும் கொடுத்து, அரவணைத்து வந்தவர் நம் இரக்கங்களின் தேவனல்லவோ!
.
நம் உலக காரியங்களில் நம்மை ஆசீர்வதித்த நம் தேவனுக்கு எத்தனை உண்மையாக நாம் ஆவிக்குரிய காரியங்களில் இருந்தோம் என்றால் அது மிகவும் குறைவாகத்தான் இருக்கும். நமக்கு நேரம் போதாது என்பதே நாம் எப்போதும் கூறும் மன்னிப்பின் காரியமாக இருக்கிறது. நாம் இன்னும் ஆவிக்குரிய காரியங்களில் நம் கவனத்தை அதிகமாக திருப்புவதில்லை, நாம் அவருக்குரிய நேரத்தை அவருக்கு கொடுக்கவில்லை என்பதே உண்மையாகும்.
.
இயேசுகிறிஸ்து ஒரு உவமையை சொல்கிறார், 'அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்: அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்' (லூக்கா 13:6-9). இந்த இடத்தில் ஒரு அத்திமரம் திராட்ச தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது, அது கனியை கொடுக்கும் என்றுதான் அந்த மரம் அங்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும். அது பெரிய மரமானபோது, மூன்று வருஷங்கள் கழித்து, எஜமான் வந்து அதில் கனியை தேடினான். ஆனால் அதில் ஒரு கனியையும் அவன் காணவில்லை. அவனுக்கு கோபம் வந்து, 'இந்த மரம் திராட்ச தோட்டத்தில் வைக்கப்பட்டு இருந்தும் கனியை கொடுக்கவில்லையே, இதை ஏன் இங்கு வைக்கவேண்டும், இதை வெட்டி போட்டால் இது இருக்கும் நிலமாவது நமக்கு கிடைக்கும், சும்மா இடத்தை அடைத்து கொண்டு இருக்கிறது' என்று கூறுகிறான். அதற்கு தோட்டக்காரன் சொன்ன பதில், 'ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம்' என்று சொன்னான்.
.
ஆம், தேவனுடைய கிருபையின்படி, நமக்கு அவர் இன்னும் ஒரு வருடத்தையும் கூட்டி கொடுத்து, நமக்கு அவருடைய வார்த்தைகளை கிருபையாக சொல்லி கொடுத்து, வசனத்தின் மூலம் நம்மோடு பேசி, நாம் எப்படியாவது அவருக்கு கனி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய வாஞ்சையை நிறைவேற்றுவோமா? வருகிற வருடத்தில் அவர் நமக்கு எருபோட்டு, தண்ணீர் பாய்ச்சி நம்மை வளர்க்கும் போது, எஜமான் வந்து கனியை நம்மிடத்தில் தேடும்போது நாம் அவருக்கு விருப்பமான கனியை கொடுக்கத்தக்கதாக கனியுள்ள வாழ்க்கையை வாழ்வோமா?
.
'ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது' (யோவான் 15:5) என்று இயேசுகிறிஸ்து சொன்னாரே, அவரில் நிலைத்திருந்து மிகுந்த கனிகளை கொடுக்கும் வாழ்க்கையை வாழும்படியாக நாம் புது வருடத்தில் புது தீர்மானத்தை எடுப்போமா? நமக்கு வாழ்வு கொடுத்த தேவனுக்கு புதிய வருடத்தில் அவருக்கு நம்மால் இயன்ற கனியுள்ள வாழ்க்கை வாழ அவருக்கு அர்ப்பணிப்போம்.
.
சென்ற வருடத்தில் கனியற்ற வாழ்வை வாழ்ந்த நம்மில் அநேகருக்கு இந்த புதிய வருடத்தில் கனியுள்ள வாழ்க்கை வாழும்படி தேவன் நம்மை கொத்தி எருபோட்டு, தண்ணீர் பாய்ச்சும்படி நம்மை விட்டு கொடுப்போம். அப்போது அவரில் நிலைத்திருந்து புதிய வருடத்தில் அதிக கனிகளை கொடுக்க தேவன் நமக்கு கிருபை செய்வார். ஆமென் அல்லேலூயா!
.
கனியில்லாத மரத்தை போல
நான் வாடி நின்றேனே
பரனேசு தம் கிருபையாலே
கனி தர செய்திட்டாரே
..
நான் கூப்பிட்ட நாளில் தானே
இயேசு சுவாமி செவி கொடுத்தாரே
நா வரண்ட வேளையிலே
ஜீவன் தந்திட்டாரே

Tuesday, December 27, 2011

கர்த்தருடைய பெரிய நாள்


கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான். - (செப்பனியா 1:14).
.
சிறுபிள்ளை தகப்பன் சொல்லை கேட்கவில்லை என்றால், அவர் வரும் சமயத்தில் கதவுக்கு பினனாலோ, கட்டிலின் அடியிலோ மறைந்து கொள்வதை பார்க்கிறோம். வழியில் கடன் கொடுத்தவரை பார்க்க நேரிடும்போது கடன்பட்டவர் சந்துக்குள் மறைந்து கொள்கின்றார். ஆதை போலத்தான் ஆதாமும், ஏவாளும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் போன போது மரத்திற்கு பின் ஒளிந்து கொண்டார்கள். அதுபோல நாமும் பாவம் செய்யும்போது மறைந்து கொள்ள இடம் தேடுகிறோம். ஆம், பாவிக்கே ஒருவரும் காண முடியாத மறைவிடம் தேவை. நீதிமானோ வெளிச்சத்தில் பயமில்லாமல் நடப்பான்.
.
இவ்வுலக வாழ்விலே தவறுகள் செய்து விட:டு அரசாங்கத்திடமிருந்தோ அதிகாரிகளிடமிருந்தோ தப்பித்து கொள்ள நாம் மறைந்து வாழலாம். அதன்மூலம் சில வேளை தப்பித்தும் கொள்ளலாம். வீரப்பனை மறைக்க அடந்து காடுகளும், சதாம் உசேனை மறைக்க பூமிக்கடியில் பொந்துகளும் உண்டு. ஆனால் ஒரு நாள் வரும். அன்று மரங்கள் அடர்ந்த மலைகளும், குகைகளும் நாம் ஒளிந்து கொள்ள இடம் தராது. மாறாக தன்னுள் ஒளிந்திருப்பவர்களை காட்டி கொடுக்கும். மறைந்து கொள்ள பூமியில் இடமே இருக்காது. எல்லாம் வெட்ட வெளிச்சமாகவும் பட்டப்பகலாகவும் காணப்படும்.
.
அது எந்த நாள்? 'கர்த்தருடைய உக்கிரகத்தின் நாள்'. தேவன் சிங்காசனத்தில் நியாதிபதியாய் வீற்றிருந்து நியாயம் விசாரிக்கும் நாள். ஆம், அன்று நாம் சேர்த்து வைத்திருக்கும் பொன்னும், வெள்ளியும் நம்மை தப்புவிக்காது. எந்த பெரிய ஊழியரும் நமக்கு ரெக்கமண்ட் பண்ண முடியாது. இவ்வுலகத்தில் நாம் வகித்து வந்த எந்த பதவியும் நம்மை பாதுகாக்காது. எவ்வளவு பெரிய கல்வியானாலும் அதுவும் நம்மை காப்பாற்றாது. ஆனால் தேவனின் உக்கிரகத்தின் நாளிலே மூன்று காரியங்கள் நம்மை மறைத்து கொள்ளும் என்று வேதம் சொல்கிறது.
.
அவை 'தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்' (செப்பனியா 2:3). மேற்கண்ட வசனத்தில், நாம் கர்த்தரை தேட வேண்டும், நீதியை தேட வேண்டும், மனத்தாழ்மையை தேட வேண்டும். இவற்றை நாம் தேடினால் இவ்வுலக வாழ்விலும் சரி, தேவ கோபாக்கினை நாளிலும் சரி, நாம் ஒளிந்து கொள்ள இடம் தேடி வேண்டிய அவசியம் இல்லை.
.
பிரியமானவர்களே, தேவன் எத்தனை அன்புள்ளவரோ, இரக்கமுள்ளவரோ அதே அளவு அவர் எரிச்சலுள்ள தேவன். மனம் திரும்பாத பட்சத்தில், பாவியின் மேல் சினம் கொள்கிறவர். பட்சிக்கிற அக்கினி என்பதையும் மறந்து போக வேண்டாம். வேதத்தை தினமும் வாசித்தும் சத்தியத்தை வாரா வாரம் கேட்டும் இன்னும் நிர்விசாரமாய், மாய்மாலக்காரர்களாய் நாம் வாழ்ந்தோமானால் தேவனின் கோபத்திற்கு எப்படி தப்பித்து கொள்வோம்? இன்னும் நாம் மெய்யாய் மனந்திரும்பாமல் போனால் தேவனின் நியாயத்தீர்ப்பு வரும்போது, என்ன செய்வோம்? நாம் அழிந்து போய் விடாதபடி, நித்திய நரகத்திலே தள்ளப்பட்டு போய் விடாதபடி, அந்த கொடிய நாளுக்கு முன்பாக மனம் திருந்துவோம். தேவ இரக்கத்தை பெற்று கொள்வோம். மாய்மால வாழ்க்கையை அப்புறப்படுத்தி விட்டு, தேவனையும், நீதியையும் தேடி, மனத்தாழ்மையை அணிந்து கொள்வோம். கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது. ஆயத்தமாவோம். ஆமென் அல்லேலூயா!
.
இருள் சூழும் நாட்கள் இனிவருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்
..
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்

Saturday, December 24, 2011

வார்த்தை மாம்சமானார்

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. - (யோவான் 1:14).

ஒரு நாட்டை சேர்ந்த மன்னர் தன் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறியும்படி அடிக்கடி வேஷம் மாறி, மக்களோடு கலந்து என்ன சொல்கிறார்கள் என்று கேட்பது வழக்கம். ஒரு முறை அவர் அப்படி சென்ற போது, பொது குளியலறையில், அங்கு தண்ணீரை சூடுபடுத்தும் தொழிலாளி இருப்பதை கண்டார். முன்பு இப்போதிருக்கும் ஹீட்டர் போன்ற சாதனங்கள் இல்லாமலிருந்த நிலைமை. அப்போது அந்த மனிதனிடம் மன்னர் பேசி, அந்த மனிதனை அவருக்கு பிடித்து போயிற்று. தினமும் அவர் அவனுடன் வந்து பேசி போவது வழக்கானது. ஒரு நாள் அவர் அந்த மனிதனிடம் 'நான் தான் இந்த நாட்டு மன்னர்' என்று கூறினார். அதை கேட்ட அந்த மனிதன் மிகவும் ஆச்சரியப்பட்டான். மன்னர் அவன் தன்னிடமிருந்து பொருள், வசதிகளை கேட்க போகிறான் என்று நினைத்தார். ஆனால் அவனோ அவரிடம் ஒன்றுமே கேட்கவில்லை. அப்போது மன்னர், 'நான் மன்னர், எது வேண்டுமானாலும் நீ கேள், உனக்கு நான் தருகிறேன்' என்று கூறினார். அதற்கு அந்த மனிதன், 'மன்னரே, நான் ஒரு மிகவும் தாழ்மையுள்ள நிலையில் உள்ளவன் என்றும், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாதவன் என்றும் நீர் அறிந்தும் என்னிடம் தினமும் வந்து, உங்களையே என்னிடம் தந்து விட்டீர்களே, அதை விட எனக்கு என்ன வேண்டும்?' என்று கண்ணீர் மல்க கேட்டான்.
.
பிரியமானவர்களே, நம் இயேசுகிறிஸ்துவும் பரலோகத்தின் மகிமையை விட்டுவிட்டு, தூதர்களின் பணிவிடைகளை தள்ளிவிட்டு, எப்பொழுதும் துதிபாடி கொண்டிருக்கும் துதிகளில், வாசமாயிருப்பதை விட்டுவிட்டு, நாம் யாவரும் வாஞ்சிக்கும் பரலோக ராஜ்யத்தின் உயர்ந்த நிலைமையை விட்டுவிட்டு எத்தனை தாழ்மையாக இந்த உலகத்தில் வந்து உதித்தாரே அவர் எத்தனை நல்ல தெய்வம்!! அவர் 'தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்' (பிலிப்பியர் 2:6-8) என்று வேதம் கூறுகிறது. அவர் யாரோ ஒரு தெய்வம் அல்ல, அவர் வானத்தையும் பூமியையும், சமுத்திரத்தையும், அவற்றில் வாழும் அனைத்தையும் உருவாக்கினவர். அவர் தேவனுக்கு சமமாயிருந்தாலும், தம்மை வெறுமையாக்கி, தம்மை ஒரு அடிமை போல ரூபம் கொண்டு, மனுஷ உருவெடுத்து, நமக்கு இரட்சிப்பை கொடுக்கும்படி தம்மை தாழ்த்தின தேவன் அல்லவா?
.
உலகமெங்கும் இந்த நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தேவன் தமது ஒரே பேறான குமாரனாகிய கிறிஸ்துவை நமக்காக கொடுத்து அன்பை நினைத்து அவருக்கு நன்றி சொல்லுவோம். நமக்காக அடிமையின் ரூபமெடுத்து, மனிதனாக அவதரித்த கிறிஸ்துவின் அன்பை நினைத்து அவருக்கு நன்றி சொல்லுவோம். அவரை சிறு குழந்தையாக எண்ணி அவருக்கு தாலாட்டு பாட்டு பாடாமல், அவர் இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தை எப்படி நிறைவேற்றினார் என்பதை நினைத்து, அவருடைய இரண்டாம் வருகையில் நாம் காணப்படத்தக்கதாக அதற்கு நம்மை ஆயத்தமாக்குவோம்.
.
'கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்' (அப்போஸ்தலர் நடபடிகள் 1:11). ஆம், மறுபடியும் அவர் சீக்கிரமாய் வரப்போகிறார். தாழ்மையின் கோலமெடுத்து அல்ல, அகில உலகத்தையும் நியாயந்தீர்க்கும் நியாதிபதியாக வரப்போகிறார். 'இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது' (வெளிப்படுத்தின விசேஷம் 22:12)என்று கூறினபடி, நாம் செய்த ஒவ்வொரு நல்ல, கெட்ட காரியத்திற்கும் ஏற்ற பலனை கொடுக்கும்படி வருவார். அவரை எதிர்கொள்ளும்படியாக நம்முடைய கிரியைகள் காணப்படும்படி ஆயத்தமான நிலையில் நாம் வாழும்படி தேவன் தாமே கிருபை செய்வராக. ஆமென் அல்லேலூயா!
.
தம்மை விரோதித்த அவபக்தரை
செம்மை வழிகளில் செல்லாதோரை
ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே
அந்நாளிலே நியாயந் தீர்த்திடுவார்
..
தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்
பூலோக மக்களும் கண்டிடுவார்

Monday, December 19, 2011

கர்த்தருடைய வழிகள்


நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. – எரேமியா. 29:11.


.
ஒரு கப்பல் மூழ்கிப் போனதினால், அதிலிருந்த அனைவரும் மரித்துப் போனார்கள். ஒருவன் மாத்திரம் தப்பி ஒரு கட்டையைப் பிடித்து, ஒரு தனிப்பட்ட ஒரு தீவில் கரை ஏறி, ஏதாவது கப்பல் அந்தப் பக்கம் வரும்போது தான் காப்பாற்றப்படுவோம் என்கிற நம்பிக்கையோடு, காத்திருந்தான். தொடர்ந்து விடாமல் ஜெபித்து யாராவது தன்னைக் காப்பாற்ற வரமாட்டார்களா? என்று நெடுநாளாய் காத்திருந்தான். ஒரு நாள் அவன் உணவைத் தேடி போயிருந்தபோது, அவன் அங்கிருந்த பொருட்களினால் செய்திருந்த கூடாரம் வெயிலில் நெருப்பு உண்டாகி, எல்லாம் எரிந்து சாம்பலாகிப் போனது. அவன் திரும்பி வந்துப்பார்த்தபோது எல்லாம் கருகி சாம்பலாய் யோயிருந்தது. அதைக் கண்டு அவனுக்கு துக்கம் தாங்க முடியவில்லை. தனக்கு ஒதுங்குவதற்கு என்று இருந்த ஒரே இடமும் போயிற்றே என்று கடவுளை சபிக்க ஆரம்பித்தான். இனி என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தன் வாழ்வையே முடித்க் கொள்ள எண்ணி, கடலுக்கு அருகில் வந்த போது, தூரத்தில் ஒரு கப்பல் வருவதைக் கண்டான். ஒரு படகு அவனை நோக்கி வந்தது. அவன் மீட்கப்பட்டான். கப்பலில் அவன் போய் சேர்ந்தபின்பு, அங்கு மாலுமியை நோக்கி, எப்படி நான் இங்கு இருப்பதை அறிந்தீர்கள்? என்றுக் கேட்டான் அதற்கு அந்த மாலுமி, 'இந்தத் தீவிலிருந்து நெருப்பு வருவதைப் பார்த்தோம். அதன் மூலம் யாரோ இங்கு இருப்பதை அறிந்து, படகை அனுப்பினோம்' என்றுக் கூறினார்.
.
அப்போதுதான் அவன் உணர்ந்தான், கர்த்தருடைய வழிகள் நம் அறிவிற்கு எட்டாதவை என்று. அவனது கூடாரம் எரிந்துப போனது, கர்த்தர் அந்தக் கப்பலுக்கு கொடுத்த சமிக்ஞை என்று அறிந்த பொது அவன் கண்களில் கண்ணீh வந்தது. தான் கர்த்தரை சபிதததற்காக அவரிடம் மன்னிப்பு வேண்டினான்.
.

நாம் சில வேளைகளில், நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் குறித்து வேதனைப்பட்டு, ஏன் எனக்கு இந்த வேதனை என்று தவித்துப் போகிறோம். நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்தில் இருப்பதால், அவர் நமக்கு தேவை என்ன என்பதை அறிந்திருக்கிறார். நாம் நிகழ்காலத்தைதான் பார்க்கிறோம். ஆனால் தேவன் முக்காலத்தையும் அறிந்தவராய் இருக்கிறபடியால் நம்முடைய தேவைகளையும் அது கொடுக்கப்பட வேண்டிய காலத்தையும் அவர் அறிவார்.

.
தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். – (யோபு 42:2) என்று யோபு சொல்கிறார். ஆகவே, அவர் எல்லாவற்றையும் பொறுப்பெடுத்து, செய்கிறபடியால் நாம் கலங்க வேண்டிய தேவையில்லை. அவர் செய்ய நினைத்தது தடைபடாது. அது தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
.
காலங்கள் மாறிடலாம் கர்த்தர் மாறுவதில்லை
மாந்தர்கள் மறந்திடலாம் இயேசு மறப்பதில்லை
அழைத்தவர் உன்னை நடத்திடுவார்
படைத்தவர் உன்னைக் காத்திடுவார்
.

Thursday, December 15, 2011

ஜெப ஜீவியம்


இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.  
(1 தெசலோனிக்கேயர் 5:17).
.


ஹேமில்ட்டர் என்ற வேத கலாசாலையிலிருந்த மூத்த ஊழியரான பாக்கஸ் என்பவர் மரிக்கும் தருவாயில் இருந்தார். மருத்துவர் பாக்கஸை சோதித்து விட்டு, அறையின் வாசலில் நின்று கொண்டிருந்த அவரது நண்பர்களிடத்தில் ஏதோவொன்றை மிக அமைதியாக சொல்லி விட்டு சென்றார். டாக்டர் சென்றவுடன் படுக்கையிலிருந்து பாக்கஸ், தன்னுடைய நண்பர்களை கையசைத்து கூப்பிட்டு, 'டாக்டர் சொன்னதை என்னிடம் மறைக்காமல் கூறுங்கள்' என்றார். இன்னும் அரைமணி நேரத்திற்கு மேல் உயிருடன் இருக்க முடியாது என்று டாக்டர் சொன்னதை கண்ணீர் மல்க கூறினர். உடனே பாக்கஸ், 'அப்படியானால் என்னை படுக்கையிலிருந்து எடுத்து முழங்காலில் நிறுத்துங்கள். என் வாழ்வின் கடைசி நிமிடங்களில இந்த உலகிற்காக ஜெபிப்பதில் செலவிட விரும்புகிறேன்' என்றார். ஒரு சில நிமிடங்களில் முழங்காலில் நின்றபடியே அவரது உயிர் பிரிந்தது. பல வருடங்களாக தான கடைபிடித்து வந்த ஜெப பழக்கத்தை உயிர் பிரிகிற கடைசி மணித்துளிகளிலும் தவறாமல் கடைபிடித்தார்.
.
ஆம், கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமே ஜெபம் தான். அது சரியாக உறுதியாக இருக்கும்போது மாத்திரமே அழகான தேவனுக்குகந்த மாளிகையாக நம் வாழ்வை கட்டி எழுப்ப முடியும்.
.
ஒரு வேளை நம்முடைய ஜெப அனுபவம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். ஒரு நாள் உணர்ச்சி பூர்வமான இருக்கும். மற்றொரு நாள் அப்படியிராது. இன்னொரு நாள் தேவ பிரசன்னத்தை அதிகமாக உணர்வோம், அதினால் ஜெபத்தில் உற்சாகமடைவோம். இதை போலவே மற்றொரு நாள் அப்படி இல்லையென்றால் நாம் சோர்ந்து விடக்கூடாது. நான் ஜெபிப்தை தேவன் கேட்டிருப்பாரா என்ற சந்தேகம் எழக்கூடாது. அதாவது நமது ஜெப ஜீவியம் உணர்ச்சியை சார்ந்தாக இல்லாமல், உள்ளத்தின் உண்மை நிலையை சார்ந்தாhகவே இருக்க வேண்டும். சில வேளைகளில் நமது ஜெபத்தில் சோர்வு வரும். ஆகவே தான் தேவன் சோர்ந்து போகாமல் ஜெபம் பண்ணுங்கள் என்றார். கர்த்தர் நம் உணர்ச்சிகளை பொறுத்தல்ல, நம் உள்ளத்தின் தாகத்தையும் வாஞ்சையையும் பொறுத்தே அவருடைய சித்தத்தின்படி பதிலளிக்கிறார்.
.
சிலர் நல்ல மனநிலை இருந்தால் மட்டும் ஜெபிப்பார்கள். இன்னும் சிலர் ஒரு நாள் நன்றாக ஜெபித்து விட்டால், ஒரு வாரம் ஜெபத்திற்கு லீவு போட்டு விடுவார்க்ள. பலர் கவலைகள் அதிகமாக நெருக்கும்போது மட்டுமே ஜெபிப்பர். இன்னும் பலர் நன்மையாக நடக்கும்போது மட்டுமே கர்த்தரை துதித்து பாடுவர். இப்படி உணர்ச்சியை சார்ந்து நமது ஜெபம் இருப்பதாலே அவ்வப்போது சோர்ந்து போய் விடுகிறோம். ஆனால் சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும் ஜெபத்திலே உறுதியாய் தரித்திருப்போமானால் அதுவே வெற்றியுள்ள கிறிஸ்தவ ஜீவியமாகும்.
.
பிரியமானவர்களே, நம்மில் அநேகர் 'ஜெபமா, அது ரொம்ப கஷ்டம், டைம் கிடைப்பது இல்லை, ஜெபிக்க ஆரம்பிக்க போதுதான் எத்தனையோ எண்ணங்கள் வந்து ஜெபத்தில் கான்சென்ட்ரேட் பண்ண முடியவில்லை' என்று சர்வ சாதாரணமாக சொல்லி விடுகிறோம். அதே சமயம் வேலையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், வேலைக்கு தவறாமல் சென்று விடுகிறோம். பிள்ளைகளை சிரமப்பட்டு படிக்க வைக்கிறோம். சமையல் செய்ய இஷ்டம் இல்லாவிட்டாலும் தினமும் செய்கிறோம். ஆனால் ஜெபம் செய்ய மட்டும் முடிவதில்லை.
.
நம்மோடு கூட வராத அநேக கரியங்களுக்காக நம் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கும்போது நம் வாழ்வை ஆசீர்வாதமாய் மாற்றக்கூடிய ஜெபத்தை தினமும் கட்டயமாக்குவது எத்தனை அவசியம்? மனிதருக்காக நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய நல்ல காரியம் அவர்களுக்காக ஜெபிப்பதும், அவர்களுக்காக தேவனிடத்தில் திறப்பில் நிற்பதுமே என்றார் ஒரு வல்லமையான ஊழியர்.


.
இந்த நாட்களில் ஜெப வாழ்வே ஒவ்வொரு கிறிஸ்தவர்களிடமும் குறைந்து காணப்படுகிறது. ஓவ்வொரு கிறிஸ்தவரும் முழங்காலில் நிற்க ஆரம்பித்து விட்டால் சத்துரு நமது வீடுகளிலோ, வீதிகளிலோ, ஊர்களிலோ, நாட்டிலோ நிற்க முடியாது. ஆனால் ஜெபக்குறைவினாலேயே கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவமும், பிரச்சனைகளும். முழங்காலில் நிற்க ஆரம்பிப்போம். நமது குடும்பத்திற்காக, சபைக்காக, ஊழியங்களுக்காக, நாட்டிற்காக ஜெபிக்க ஆரம்பிப்போம். அந்த ஜெபங்களின் மூலம் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். ஆமென் அல்லேலூயா!
.
ஜெப ஆவி ஊற்றுமையா
ஜெபிக்கணும் ஜெபிக்கணுமே
..
தானியேல் போல மூன்று வேளையும்
தவறாமல் நான் ஜெபிக்கணுமே

Tuesday, December 13, 2011

பரிசுத்த வாழ்க்கை

உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்'. - (1பேதுரு 1:15).


நாம் ஒரு பாதையில் நடந்து கொண்டிருக்கிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். வழியில் ஒரு பெரிய பாதாள குழி வெட்டப்பட்டிருக்கிறது. கொஞ்சம் இருட்டாக இருந்தபடியால் நாம் பார்க்காதபடி அதில் விழுந்து விடுகிறோம். அதிலிருந்து வெளியே வர மிகவும் முயற்சித்து பின் எப்படியோ வெளியே வந்து விடுகிறோம். இது நம்முடைய தவறு அல்ல. அதை போலத்தான் நாம் பாவத்தில் விழும்போதும், நம்மை அறியாமல் நமக்கு சத்துருவானவன் வைத்திருக்கிற வலையில் விழுந்து விடுகிறோம். அது நமது தவறல்ல என்றாலும், அதிலிருந்து நாம் கஷ்டப்பட்டு வெளியே வந்து விட வேண்டும். அதிலேயே விழுந்து கிடக்கக்கூடாது.
.
அடுத்த நாள் திரும்பவும் அந்த வழியே செல்லும்போது, அந்த குழியை பார்க்கிறோம். நாம் திரும்பவும் விழுந்து போகிறோம். மீண்டும் கஷ்டப்பட்டு வெளியே வருகிறோம். இதுவும் நமது தவறு அல்ல. ஒரு தடவை தான் விழுந்தோம், நேற்று வெளியே வர கஷ்டப்பட்டோமே என்று நாம் நினைப்பதில்லை, திரும்பவும் அதிலே விழுந்து விடுகிறோம். ஏனெனில் ருசி கண்ட பூனையை போல, பாவத்தின் ருசி நம்மை விழ வைத்து விடுகிறது
.அடுத்த நாள் திரும்பவும் அந்த வழியே வருகிறோம். திரும்ப அந்த குழியில் விழுகிறோம். இப்போது அது பழக்கமாகிவிட்டது. நமக்கு அங்கு குழி இருக்கிறது என்று தெரிந்தும் நம் கண்கள் திறக்கப்பட்டும், போய் நாம் விழுந்தோமானால் அது நமது தவறாகும். எப்படியோ சீக்கிரமாய் வெளியே வந்து விடுகிறோம். இப்போது பாவத்தில் விழுவது வாடிக்கையாகி விட்டது. வெளியே வருவதற்கும் பிரியமில்லாமல் விழுந்து விழுந்து எழுவது பழக்கமாகி விடுகிறது. இப்படி பழகி விட்டால் பாவத்திலிருந்து வெளியேறுவது மிகவும் கடினமே.
.
தேவன் நம்மை அதற்காக அழைக்கவில்லை. விழுந்து விழுந்து எழுந்து நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் எழுந்தரிப்பான் என்ற வசனத்தையே சொல்லி கொண்டு விழுந்து எழுந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்காக நாம் கர்த்தரால் அழைக்கப்படவில்லை. 'நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படியே இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்' (1 பேதுரு 1:14-15) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. முன்னே நம்முடைய அறியாமையினாலே விழுந்தோம். ஆனால் நாம் அப்படியே விழுந்து கிடக்கிறது தேவனுடைய சித்தமல்ல, அவர் பரிசுத்தராய் இருக்கிறது போல நாமும் பரிசுத்தமாய் ஜீவிப்பதே அவருடைய சித்தமாயிருக்கிறது.
.
அடுத்த நாளும் அந்த தெருவின் வழியே செல்கிறோம், குழியும் இருக்கிறது. ஆனால் அந்த குழியை சுற்றி நடந்து, விழாமல் பாதுகாத்து கொள்கிறோம்.
.
அடுத்த நாள் அந்த தெருவின் வழியாக செல்லாமல், வேறு தெருவின் வழியாக செல்ல ஆரம்பித்து விடுகிறோம். இதுவே நாம் அந்த குழியில் விழாதபடி நம்மை காத்து கொள்வதற்கு ஏற்ற வழியாகும். நமக்கு அந்த வழியில் சென்றால் பாவத்தில் விழுந்து விடுவோம் என்று தோன்றினால், அந்த வழியாக செல்லாமல், வேறு வழியாக செல்வதே நம்மை பாதுகாத்து கொள்ளும்படியான வழியாகும்.
.
இயேசுகிறிஸ்துவின் வருகை சமீபமாயிக்கிறது. நாம் பாவத்தில் புரண்டு கொண்டிருப்போமானால், திருடனை போல இருக்கும் அவருடைய வருகையில் கைவிடப்பட்டு போய் விடுவோம். அவர் பரிசுத்தமாய் இருப்பது போல நாமும் நம்மை பரிசுத்தமாய் காத்து கொள்வோமானால் அவருடைய வருகையில் நிச்சயமாய் நாம் எடுத்து கொள்ளப்படுவோம் என்பதில் சந்தேகமேயில்லை.

.
பாவம் செய்யாதபடி பாதுகாத்து கொள்ள வேண்டியது நம்முடைய செயலாகும். தேவன் என்னை பாதுகாத்து கொள்வார் என்று நாம் நம்மை காத்து கொள்ளாமல் போனால் நிச்சயமாய் விழுந்து போவோம். நாம் விழுந்து போகும்படி சத்துருவானவன் நமது கால்களுக்கு எப்போதும் வலையை விரிக்கிறவனாகவே இருக்கிறான். ஆனால் நாம் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்கும்போது, அவனது கண்ணிகளுக்கு தப்பி நடக்க முடியும். நாம் அதற்காக முதலடி எடுத்து வைக்கும்போது, கர்த்தர் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கான கிருபைகளை தருவார். நாம் முதலடியே எடுத்து வைக்காமல், பாவத்தில் ருசித்து ரசித்து வாழ்ந்து கொண்டிருப்போமானால், நிச்சயமாகவே கிறிஸ்துவின் வருகையில் கைவிடப்பட்டவர்களாய் போய் விடுவோம். பாவம் நம்மை கறைப்படுத்தாதபடி நம்மை காத்து கொள்வோம். கர்த்தர் நமக்கு முழு வெற்றியை தருவார். ஆமென் அல்லேலூயா!
.
உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
என்னைத் திருத்த வேண்டும் தேவா
கருத்தோடு உமது வசனம்
கற்றுத் தந்து நடத்த வேண்டும்
..
மகிமை, மாட்சிமை மாவேந்தன் உமக்கே
துதியும் கனமும், தூயோனே உமக்கே

Monday, December 12, 2011

முப்புரி நூல்


மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.- (கொலேசேயர். 3:18-10).
.


ஒரு கணவனும் மனைவியும் திருமண ஆலோசகரிடம் தங்கள் திருமணத்தின் பிரச்சனைகளைக் குறித்து ஆலோசனைப் பெற சென்றிருந்தனர். அவரிடம் அமர்ந்த மாத்திரத்தில், இருவரும் ஒரே நேரத்தில் ஒருவர் மேல் இருக்கும் குறைபாடுகளைக் குறித்து, விடாமல் பேச ஆரம்பித்தனர். ஒருவர் மேல் ஒருவர் குற்றம்சாட்டி, பேசிக் கொண்டேஇருந்தனர். அதை பொறுமையோடுக் கேட்டுக் கொண்டிருந்த ஆலோசகர், முடிவில், ‘இப்போது நீங்கள் மற்றவர்களிடம் கண்ட நல்ல குணங்களைப் பற்றிக் கூறுங்கள்’ என்றார். இருவரும் மௌனமாக இருந்தனர்.
.
சிறிது நேரம் கழித்து அவர் இருவரிடமும் ஒரு வெள்ளைத்தாளையும் ஒரு பேனாவையும் கொடுத்து, ‘ஏதாவது ஒரு சில நல்ல குணங்களையாவது இந்தத் தாளில் எழுதுங்கள்’ என்றுக் கூறினார். அப்போதும் இருவரும் பேசாமல் இருந்தனர். வெகு நேரம் கழித்து, கணவன் அந்தத் தாளில் ஏதோ எழுத ஆரம்பித்தார். உடனே மனைவியும் வீறாப்பாக, வேகமாக எதையோ எழுத ஆரம்பித்தாள். கடைசியில் இருவரும் எழுதுவதை நிறுத்தினர். மனைவி தான் எழுதிய தாளை அந்த ஆலோசகரிடம் தள்ளினாள். அப்போது அவர், ‘இல்லை, நீங்களே உங்கள் கணவரிடம் கொடுங்கள்’ என்றார். அரைமனதுடன் அந்தத்தாளை கணவரிடம், பாதி கையை நீட்டிக் கொடுத்தாள். கணவரும் தன் தாளை அவளிடம் கொடுத்தார்.
.
இருவரும் வாசிக்க ஆரம்பித்தனர். அப்போது மனைவியின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. அவள் அந்த தாளை தன் இருதயத்தோடு வைத்து, அழ ஆரம்பித்தாள். தன் கணவன் தன்னைப் பற்றி இந்த அளவு நல்லதாக அறிந்து வைத்திருக்கிறாரே என்று நினைத்து, அவளால தாங்க முடியவில்லை. அந்த சூழ்நிலையின் இறுக்கம் மாற ஆரம்பித்தது. இருவரும் சந்தோஷமாக அந்த இடத்தை விட்டுச் சென்றனர். பாராட்டுதல் எத்தனையோ புண்களை ஆற்றிவிடும்.
.
திருமண வாழ்க்கை என்பது, ஏதோ இருவர் சேர்ந்து வாழும் வாழ்க்கை எனபதல்ல, இருவரும் ஒன்றிணைந்து வாழும் வாழ்க்கையாகும். ‘இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்’ - (ஆதியாகமம் 2: 24). இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று வேதம் கூறுகிறது. இன்று அநேக குடும்பங்களில் அதை மறந்து, கணவன் யாரோ மனைவி யாரோ என்று ஒருவருக்கொருவர் வாக்குவாதங்கள் செய்துக் கொண்டு, தங்கள் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் ஒரு வார்த்தை பேசினால் மற்றவர் பத்து வார்த்தை, மற்றவர் பத்து வார்த்தை என்றால், அடுத்தவர் 20 வார்த்தை. இதற்கு முடிவுதான் என்ன? எத்தனைப் பேர் வந்தாலும் தீர்க்க முடியாத பிரச்சனைகள்!
.
கர்த்தர் இதற்காகவா இவர்களை சேர்த்து வைத்தார்? “மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்” என்று வேதம் அறிவுரைக் கூறுகிறது. ஆனால், மனைவி கீழ்ப்படிவது கிடையாது. புருஷர் அன்புக் கூறுவதுக் கிடையாது. அப்புறம் எப்படி, வாழ்வு இனிக்கும்? கல்யாணமாகி 20 வருடங்களானாலும், மனைவியின் குடும்பத்தை இழிவாகக் கூறும் கணவன், அதற்கு சூடாக பதிலை வைததிருக்கும் மனைவி, பிள்ளைகள் பார்க்கிறார்களே என்கிற ஞானம் கூட இல்லாத தம்பதியர் சண்டைகள், இதில் தேவன் எப்படி மகிமையடைவார்?
.
இதற்கெல்லாம் முடிவுதான் என்ன? சாகும்வரை இப்படித்தான் இருக்கப் போகிறார்களா? ஒரே ஒரு முடிவுதான் உண்டு! அது கணவனும் மனைவியும் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டும். இரட்சிக்கப் பட்டிருந்தால் சண்டையே இல்லையா? என்றுக் கேட்கிறவர்களின் கேள்வி காதில் விழுகிறது. சண்டை வந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சூரியன் அஸ்தமிக்குமுன் இருவரும் ஒன்றாகி விடுவார்கள். அதுதான் வித்தியாசம்!
.
கணவர்களே! உங்கள் மனைவியை பாராட்டி பேசுங்கள்! அதில் அவர்கள் மயங்கி விடுவார்கள். மனைவிகளே, உங்கள் கணவர்களை கோபப்படுத்தாதீர்கள். தேவையில்லாத பிரச்சனைகளை வேலை முடிந்து வரும்போது பேசி அவருடைய மூடை கெடுத்து, பின் அழுது புலம்பி, சண்டையிடாதீர்கள்! சந்தோஷமாயிருங்கள்! ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மன்னியுங்கள். மன்னித்து மறந்து விடுங்கள். 20 வருஷம் கழித்தும் அதைக் குறித்துப் பேசி புண்படுத்தாதீர்கள்! தவறாமல் ஒவ்வொரு நாளும் குடும்ப ஜெபம் செய்யுங்கள். முப்புரி நூல் சீக்கிரம் அறாது (பிரசங்கி. 4:12) கணவனும் மனைவியும் தேவனும் சேர்ந்த முப்புரி நூல் சீக்கிரம் அறாது. தேவனை தலைவராகக் கொண்டு, வாழ்வு நடத்தும் குடும்பம் எந்த புயல் வந்தாலும் அசையாது. ஆமென் அல்லேலூயா!
.
நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்
உம்க்காய் வாழுவோம் உம் நாமம் சொல்லுவோம்

Sunday, December 11, 2011

ஜாமக்காரன்

இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.
- (வெளிப்படுத்தின விசேஷம் 16:15).



இந்த வசனத்திற்கு அநேக வியாக்கியானங்கள் இருக்கிற போதிலும், இஸ்ரவேலில் வழங்கப்பட்டு வந்த காரியம் இந்த வசனத்தின் அர்த்தத்திற்கு ஒத்துப் போவதால், இதை இங்கே எழுதுகிறேன். எருசலேமில் தேவாலயம் இருந்த நாட்களில் லேவியர்கள் அந்த ஆலயத்தை பரிசுத்தமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவர்களது வேலையாகும். ஆகையால் அவர்களின் தலைவன், முழு இரவும் பாதுகாப்பு ஒழுங்காக மற்றவர்கள் செய்கிறார்களா என்று கண்காணிப்பது வழக்கம். அதை அழுக்காகாதபடிக்கு அதைக் காக்க வேண்டியது, அங்கு ஜாமக்கார லேவியனின் பொறுப்பில் இருந்து வந்தது. எந்த ஜாமக்காரனாவது இரவில் களைப்பின் மிகுதியால் தூங்கிவிட்டால், அவர்களின் தலைவன் வந்து கண்காணிக்கும் நேரத்தில், அவனை தூங்குகிறவனாக கண்டால், அந்தக் ஜாமக்காரனை அடித்து, அவனுடைய துணிகளை உரிந்து, அவற்றை நெருப்பில் போட்டுவிடுவான். அப்போது அந்தக் காவல்காரன் துணியில்லாமல், நிருவாணமாகத்தான் தன் வீட்டிற்கு செல்ல வேண்டும். இதைத்தான் உவமையாக இயேசுகிறிஸ்து தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றுக் கூறிகிறார்.
.
இயேசுகிறிஸ்து சீக்கிரம் வரப் போகிறார். அதற்கான அடையாளங்கள் வெகு விரைவாக நடந்தேறி வருகின்றன. இதோ திருடனைப் போல் வருகிறேன் என்றுச் சொன்னவர் சீக்கிரம் வந்துவிடுவார். ஆனால் நாம் ஆயத்தமா?
.
ஒவ்வொரு கிறிஸ்தவரும் இந்நாட்களில் ஜாமக்காரன்தான். கர்த்தருடைய வருகைக்கு விழித்திருந்து காத்திருக்க வேண்டியது நமது கடமை. அவர் வரும்போது நமது இரட்சிப்பின் வஸ்திரத்தில் கறை இருந்தால் அவரோடு போவது இயலாத காரியம். ஆகவே நம் வஸ்திரத்தை கறையில்லாதபடி காத்து, திருடனைப் போல் இருக்கப் போகும்; அவரது வருகைக்கு நாம் எப்போதும் ஆயத்தமாயிருக்க வேண்டும். தேவாலயத்தைக் காத்த அந்த காவல்காரன் தூங்கிவிட்டால், எப்படி தண்டனையோ, அதேப் போல நாமே தேவாலயம், இந்த சரீரத்திலும் எந்த அழுக்கும் இல்லாதபடி காத்துக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும். அப்படி காத்துக் கொள்ளாதப் பட்சத்தில் நம் வஸ்திரங்கள் இல்லாமல் இருக்கும் நிலைமைக்கு தள்ளப்படுவோம். அதாவது, இரட்சிப்பின் வஸ்திரம் இல்லாமல் நாம் பரலோக ராஜ்ஜியம் சேர முடியாது. இதை நாம் இயேசுகிறிஸ்து கூறின ஒரு உவமையில் காணலாம், ‘விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்த போது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.’ அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்(மத்தேயு 22:11-13). ஆகவே ஜாமக்காரராய் நாம் நம் வஸ்திரம் கறைப்படாமல் பத்திரமாய்க காத்துக் கொள்வோம். இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார். ஆமென்! மாரநாதா! இயேசுகிறிஸ்துவே வாரும்.
.
திருடனைப் போல் அவர் வருகை
தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
அழுது புலம்பி கதறுவாரே

Thursday, December 8, 2011

கடுகு விதை


'தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்? அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது' - (மாற்கு 4:31-31).


மார்த்தா பெரி என்கிற இளம் பெண் தன்னுடைய மிகப்பெரிய பங்களாவிலிருந்து புத்தகத்தை படித்து கொண்டிருந்தபோது, வெளியே சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்த சத்தம் கேட்டது. அவள் அங்கு போய் அவர்களை அழைத்து கொண்டு வந்து, வேதத்திலுள்ள கதைகளை சொல்லி கொடுத்து அனுப்பினாள். அதன்பிறகு வாராவாரம் ஒரு நாள் அவர்களை அழைத்து அவள் வேதாகம சம்பவங்களை சொல்லி கொடுத்தும், படிக்க தெரியாதிருந்த சிறுவர்களுக்கு படிக்கவும் எழுதவும் சொல்லி கொடுக்க ஆரம்பித்தாள்.
.
1902-ல் ஒரு பள்ளிக்கூடத்தை அந்த இடத்தில் கொஞ்சம் பணத்தை திரட்டி ஆரம்பித்து, ஏழை மாணவர்களுக்கு அங்கு பாடம் சொல்லி கொடுக்கபட்டது. அது அப்படியே வளர்ந்து இப்போது 38 தனிப்பட்ட கட்டிடங்களாக, 2000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இடமாக பெரிதாக பெரி காலேஜ் ஆக உயர்ந்து நிற்கிறது. ஒரு கடுகு விதையை போல ஏழைகளுக்கென்று ஆரம்பிக்கப்பட்ட அந்த பள்ளி, தற்போது ஒரு பெரிய கல்லூரியாக, பெயர் பெற்ற கல்லூரியாக சிறந்து விளங்குகிறது.
.
மேற்கண்ட வசனத்தில் தேவனுடைய ராஜ்யம் ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது என்று இயேசுகிறிஸ்து சொன்னார். தேவனுடைய ராஜ்யம் என்றால் நாம் நினைப்பது, ஒரு பெரிய சாம்ராஜ்யம், கிறிஸ்து அதிலிருந்து இராஜாதி இராஜாவாக அரசாளுவார் என்று தான். ஒரு போதும் ஒரு சிறிய கடுகு விதைக்கு ஒப்பாக நாம் நினைக்க மாட்டோம். ஆனால் இயேசுகிறிஸ்து தேவ ராஜ்யத்தை கடுகு விதைக்கு ஏன் ஒப்பிட்டு சொன்னார்?
.
கடுகு விதையை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். நம் இந்திய சமையலில் கடுகு போட்டு தாளிக்காமல் எந்த குழம்பையும் நாம் செய்ததில்லை (ஒரு சில குழம்புகளை தவிர). குறைந்தது 750 விதைகளாவது இருந்தால் தான் ஒரு கிராம் எடைக்கு சரியாகும். அவ்வளவு சிறிய கடுகு விதையாயிருந்தாலும், அது சரியான நிலத்தில் விதைக்கப்படும்போது, மிக பெரிய மரமாக மாறுகிறது.
.
அந்த காலத்தில் வாழ்ந்த யூதர்கள் கிறிஸ்துவின் ஊழியங்களினால் என்ன பயன் கிடைக்க போகிறது என்று நினைத்தார்கள். இயேசுகிறிஸ்துவை அவர்கள் மேசியாவாக காணவில்லை, ஏதோ ஒரு போதகராகத்தான் கண்டார்கள். ஏனெனில் கிறிஸ்து ஏழ்மையான பெத்லகேமில் ஏழ்மையான நிலையில் பிறந்தார். நாசரேத்தில் வளர்க்கப்பட்டார். நாசரேத் மத காரியங்களில் மிகவும் பின்தங்கியதாக அந்நாட்களில் கருதப்பட்டது. கிறிஸ்து மூன்றரை வருட ஊழியத்தில் பணம் இருந்ததில்லை, அன்றைய மதத்தலைவர்கள் அவரை எதிரியாக நினைத்தனர். அவரோடு கூட இருந்த சீஷர்கள் பெரிய இடத்திலிருந்து வந்தவர்கள் அல்ல. ஆகவே இவரால் நமக்கு என்ன நடக்க போகிறது என்று அவர்கள் நினைத்தார்கள். அவரது ஊழியம் கடுகு விதையை போல மிகவும் அற்பமானதாக இருந்தாலும், பின்னாளில் நடந்தது என்ன? எங்கெல்லாம் சுவிசேஷமாகிய கடுகு விதை விதைக்கப்பட்டதோ அங்கெல்லாம் மனிதரின் வாழ்க்கை மாறியது, வாழ்க்கை தரம் உயர்ந்தது.
.
கடுகு விதை நல்ல நிலத்தில் விதைக்கபட்டால், அது மிகப்பெரிய மரமாக வளருமாம். குறைந்த பட்சம் 15அடி உயரத்திற்கு கூட வளருமாம். ஆம், பேதுருவினால் சுவிசேஷம் விதைக்கப்பட்டபோது, ஒரே நாளில் 3000 பேர் கர்த்தரை ஏற்று கொண்டார்கள். 5000 பேர் ஏற்று கொண்டார்கள். கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்கள் பலுகி பெருக ஆரம்பித்தார்கள். ஆங்காங்கே சென்று விதைக்க ஆரம்பித்தார்கள். அநேக சபைகள் எழும்பின, அநேக ஆஸ்பத்திரிகள் கிறிஸ்துவின் நாமத்தில் கட்டப்பட்டன, அனாதை ஆசிரமங்கள், தொழுநோய் மருத்துவமனைகள் கிறிஸ்துவின் நாமத்தை கொண்டு ஆரம்பிக்கப்பட்டன. ஆம், ஒரு சிறு கடுகு விதையை போன்று தான் கிறிஸ்து மூன்றரை வருடகால் ஊழியத்தை செய்தார். ஆனால் அவருடைய அந்த ஊழியம் இன்று பெரிய மரமாக வளர்ந்து பெருகி நிற்கிறது. அல்லேலூயா! 'விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும்' என்ற வசனத்தின்படி அநேகருக்கு வாழ்வு தந்து இம்மையில் மாத்திரமல்ல, மறுமையிலும் நித்திய வாழ்வு தருவதாக கர்த்தருடைய தேவ ராஜ்யம் விளங்குகிறது.
.
பிரியமானவர்களே, தாவீது ஒரு கடுகு விதையை போலத்தான் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். ஆனால் கர்த்தர் அவரை தெரிந்து கொண்டு, முழு இஸ்ரவேலுக்கும் அரசராக்கினார் அல்லவா? மோசே தான் ஒரு திக்குவாயன் என்று சொன்னாலும், அவரை கொண்டுதான் கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். கிதியோன் இஸ்ரவேலரின் எல்லா கோத்திரத்திலும் தன் கோத்திரம் மிகவும் எளிமையானது என்று கூறினபோதும், அவரை கொண்டு தான் கர்த்தர் இஸ்ரவேலருக்கு இரட்சிப்பை கொடுத்தார். இப்படி சொல்லி கொண்டே போகலாம்...
.
நாமும் நான் என்ன ஒரு கடுகு விதையை போலத்தான் இருக்கிறேன் என்று சொல்லாம், நம்முடைய ஆரம்பம் அற்பமாயிருந்தாலும், பின்னாளில் முடிவு சம்பூரணமாக இருக்கும்படி தேவன் கிருபை செய்வார். நம்முடைய கண்களுக்கு மிக சிறியதாக தோன்றும் நம்முடைய ஊழியத்தை கொண்டு தேவனால் மிகப்பெரிய எழுப்புதலை கொண்டு வரமுடியும். 'அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?' (சகரியா 4:10) கையளவு மேகத்தை கொண்டு தேவனால் கனமழையை கொண்டு வரமுடியுமென்றால், நம்மை கொண்டும் பெரிய காரியத்தை செய்வது அவரால் முடியுமல்லவா? நம்மால் முயன்றதை நாம் கடுகளவு விதையை போலிருந்தாலும் முழு மூச்சோடு செய்வோம். கர்த்தர் அதை பெரிய மரமாக தழைத்தோங்க செய்வார். ஆமென் அல்லேலூயா!
.
ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூரணமாம்
குறைவுகள் நிறைவாகட்டும்
என்வறட்சி செழிப்பாகட்டும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா