Thursday, December 29, 2011

கனியுள்ள ஜீவியம்


அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். - (லூக்கா 13:8-9).
.
இந்த வருடத்தின் ஆரம்பத்தை காண செய்த நம் அன்பின் தேவன் இந்த வருடத்தின் முடிவையும் காண செய்த அவரது மட்டில்லாத கிருபைக்காக அவரை முழு இருதயத்தோடும் ஸ்தோத்தரிப்போம். எத்தனையோ வாலிபர்கள், சிறுவயதுடையோர், நம்மை காட்டிலும் பலவான்களாக இருந்த அநேகர் நம்மோடு இந்த நாட்களை காணவில்லை. ஆனால் தேவன் நமக்கு அந்த கிருபையை பாராட்டி, நம்மை போஷித்து, பராமரித்து, பாதுகாத்து இந்நாள் வரை நம்மை நடத்தி வந்த அவருடைய கிருபைகளுக்காக அவரை துதிப்போமா?
.
இன்னும் இரண்டு நாட்களில் நாம் இந்த வருடத்தை கடந்த வருடம் என்று சொல்ல போகிறோம். இந்த வருடம் நம்மில் அநேகருக்கு ஒரு வேளை ஆசீர்வாதம் நிறைந்த வருடமாக இருந்திருக்கலாம், தேவன் நமக்கு நிறைவாய் கொடுத்த வருடமாக இருந்திருக்கலாம், ஒரு சிலருக்கு இந்த வருடம் தங்கள் உயிருக்குயிரானவர்களை இழக்க கொடுத்த வருடமாக இருந்திருக்கலாம், அல்லது எத்தனையோ காரியங்களை இழந்த வருடமாக இருந்திருக்கலாம். ஆனால் நம்மை இதுவரைக்கும் வழி நடத்தி வந்து, நமக்கு ஆறுதலையும் தேறுதலையும் கொடுத்து, அரவணைத்து வந்தவர் நம் இரக்கங்களின் தேவனல்லவோ!
.
நம் உலக காரியங்களில் நம்மை ஆசீர்வதித்த நம் தேவனுக்கு எத்தனை உண்மையாக நாம் ஆவிக்குரிய காரியங்களில் இருந்தோம் என்றால் அது மிகவும் குறைவாகத்தான் இருக்கும். நமக்கு நேரம் போதாது என்பதே நாம் எப்போதும் கூறும் மன்னிப்பின் காரியமாக இருக்கிறது. நாம் இன்னும் ஆவிக்குரிய காரியங்களில் நம் கவனத்தை அதிகமாக திருப்புவதில்லை, நாம் அவருக்குரிய நேரத்தை அவருக்கு கொடுக்கவில்லை என்பதே உண்மையாகும்.
.
இயேசுகிறிஸ்து ஒரு உவமையை சொல்கிறார், 'அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்: அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்' (லூக்கா 13:6-9). இந்த இடத்தில் ஒரு அத்திமரம் திராட்ச தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது, அது கனியை கொடுக்கும் என்றுதான் அந்த மரம் அங்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும். அது பெரிய மரமானபோது, மூன்று வருஷங்கள் கழித்து, எஜமான் வந்து அதில் கனியை தேடினான். ஆனால் அதில் ஒரு கனியையும் அவன் காணவில்லை. அவனுக்கு கோபம் வந்து, 'இந்த மரம் திராட்ச தோட்டத்தில் வைக்கப்பட்டு இருந்தும் கனியை கொடுக்கவில்லையே, இதை ஏன் இங்கு வைக்கவேண்டும், இதை வெட்டி போட்டால் இது இருக்கும் நிலமாவது நமக்கு கிடைக்கும், சும்மா இடத்தை அடைத்து கொண்டு இருக்கிறது' என்று கூறுகிறான். அதற்கு தோட்டக்காரன் சொன்ன பதில், 'ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம்' என்று சொன்னான்.
.
ஆம், தேவனுடைய கிருபையின்படி, நமக்கு அவர் இன்னும் ஒரு வருடத்தையும் கூட்டி கொடுத்து, நமக்கு அவருடைய வார்த்தைகளை கிருபையாக சொல்லி கொடுத்து, வசனத்தின் மூலம் நம்மோடு பேசி, நாம் எப்படியாவது அவருக்கு கனி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய வாஞ்சையை நிறைவேற்றுவோமா? வருகிற வருடத்தில் அவர் நமக்கு எருபோட்டு, தண்ணீர் பாய்ச்சி நம்மை வளர்க்கும் போது, எஜமான் வந்து கனியை நம்மிடத்தில் தேடும்போது நாம் அவருக்கு விருப்பமான கனியை கொடுக்கத்தக்கதாக கனியுள்ள வாழ்க்கையை வாழ்வோமா?
.
'ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது' (யோவான் 15:5) என்று இயேசுகிறிஸ்து சொன்னாரே, அவரில் நிலைத்திருந்து மிகுந்த கனிகளை கொடுக்கும் வாழ்க்கையை வாழும்படியாக நாம் புது வருடத்தில் புது தீர்மானத்தை எடுப்போமா? நமக்கு வாழ்வு கொடுத்த தேவனுக்கு புதிய வருடத்தில் அவருக்கு நம்மால் இயன்ற கனியுள்ள வாழ்க்கை வாழ அவருக்கு அர்ப்பணிப்போம்.
.
சென்ற வருடத்தில் கனியற்ற வாழ்வை வாழ்ந்த நம்மில் அநேகருக்கு இந்த புதிய வருடத்தில் கனியுள்ள வாழ்க்கை வாழும்படி தேவன் நம்மை கொத்தி எருபோட்டு, தண்ணீர் பாய்ச்சும்படி நம்மை விட்டு கொடுப்போம். அப்போது அவரில் நிலைத்திருந்து புதிய வருடத்தில் அதிக கனிகளை கொடுக்க தேவன் நமக்கு கிருபை செய்வார். ஆமென் அல்லேலூயா!
.
கனியில்லாத மரத்தை போல
நான் வாடி நின்றேனே
பரனேசு தம் கிருபையாலே
கனி தர செய்திட்டாரே
..
நான் கூப்பிட்ட நாளில் தானே
இயேசு சுவாமி செவி கொடுத்தாரே
நா வரண்ட வேளையிலே
ஜீவன் தந்திட்டாரே

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment