Sunday, November 27, 2011

விசுவாசமுள்ள ஜெபம்


நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. - (யாக்கோபு 5:16).


ஜேம்ஸ் கோல்ட் என்ற அமெரிக்க கோடீஸ்வரர் தன் வியாபார காரியமாக நியூயார்க் நகரிலிருந்து லாஸ் ஏஞ்சல் நகருக்கு போய் விட்டு திரும்பும்போது, வந்த வழியே திரும்ப அவருக்கு மனமில்லை. ஆகவே அமெரிக்காவின் தென் பகுதியை சுற்றி பார்த்து விட்டு போக எண்ணி இரயில் ஏறினார். டெக்சாஸ் மாகாணத்தில் வரும்போது ஓர் இடத்தில் எஞ்சினில் கோளாறு ஏறுபட்டு இரயில் நிறுத்தப்பட்டது. இரயில் ஓட்டுனர், 'எஞ்சினை சரி செய்ய குறைந்தது ஐந்து மணி நேரம் ஆகும். ஆகவே பயணிகள் விரும்பினால் அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று இளைப்பாறி வரலாம்' என்றார்.
.

நேரத்தை செலவழிப்பதற்காக ஜேம்ஸ் கோல்ட் பக்கத்து கிராமத்திற்கு சென்றார். அங்கு ஒரு மைதானத்தில் ஒரு கூட்ட மக்களுக்கு முன் ஒருவர் ஏலம் கூறி கொண்டிருந்தார். கோல்ட், 'இங்கு என்ன ஏலம் விடப்படுகிறது?' என்று விசாரித்தார். அப்போது ஒருவர் பக்கத்திலிருந்த கிறிஸ்தவ ஆலயத்தை காட்டி, 'இந்த கோயிலைத்தான் ஏலம் விடுகிறார்கள். ஏலம் விடுபவர்தான் இதை கட்டிய கான்ட்ராக்டர். தனக்கு சேர வேண்டிய பணம் கொடுக்கப்படாததால் கோயிலை ஏலத்துக்கு கொண்டு வந்து விட்டார். கோயில் நிர்வாகிகளும் மற்றும் சிலரும் ஆலயத்திற்குள் ஜெபம் செய்து கொண்டிருக்கின்றனர்' என்றார். கோல்ட் ஆலயத்திற்குள் சென்றார். அங்கு ஒரு சிறு கூட்டத்தினர் கண்ணீரோடு கதறி ஜெபித்து கொண்டிருந்தனர். 'கர்த்தரே இதை ஏலம் எடுப்பவரிடமிருந்து சிறிது காலத்திற்குள் நாங்கள் பணத்தை செலுத்தி மீட்டு கொள்ள எங்களுக்கு வழியை திறந்தருளும்' என்று ஜெபித்து கொண்டிருந்தனர். அதை கண்ட கோல்ட், ஏலம் விடும் இடத்திற்கு சென்று பெரும் தொகையை கூறி ஏலத்திற்கு அந்த ஆலயத்தை எடுத்தார். ஒரு வழக்கறிஞரை அழைப்பித்து, அவரையும் ஆலய நிர்வாகிகளையும் அழைத்து, ஆலயத்தை அச்சபைக்கு சொந்தமானதாக எழுதி, பத்திரத்தை நிர்வாகிகளிடம் கொடுத்து விட்டு, மணியை பார்த்தார். இரயில் ஓட்டுனர் சொன்ன நேரம் நெருங்கி கொண்டிருந்தது. தேவன் தனக்கு இவ்வழியே வர விருப்பம் தந்ததையும், இரயிலின் கோளாறையும் எண்ணி அதிசயித்தார். தேவனுடைய வல்லமையை எண்ணி வியந்தார்.
.
பிரியமானவர்களே, நீங்கள் விசுவாசத்தோடு ஜெபித்து கொண்டிருக்கும் காரியம் என்ன? நீங்கள் வேண்டி கொண்டிருக்கும் காரியத்தில் தேவன் இன்றே பதில் கொடுப்பார். உங்கள் வாழ்வில் அற்புதம் நடைபெற எந்த வழியும் இல்லாதிருக்கலாம், பணபலமும் ஆள்பலமும் இல்லாதிருக்கலாம், சாதகமற்ற சூழ்நிலைகளே காணப்படலாம், அன்று ஒரு காகத்தை கொண்டு எலியாவின் தேவையை சந்தித்தவர் இன்றும் உங்களுக்கு உதவும்படி ஒருவரை அனுப்புவார். ஏனெனில் விசுவாசமுள்ள ஜெபம் ஒருபோதும் சாவதில்லை. அந்த ஜெபம் நிச்சயமாய் தேவனிடமிருந்து பதிலை பெற்று வரும். ஆகவே உங்கள் ஜெபத்திற்கு நிச்சயமாய் பதிலுண்டு. சோர்ந்து போகாதிருப்போம்.
.
நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது என்ற வசனத்தின்படி, நாம் நீதிமான்களாயிருந்து செய்யும் ஜெபம் மிகவும் பெலனுள்ளதாய், தேவனிடத்திலிருந்து பதிலை பெற்று தரக்கூடியதாக உள்ளது. தானியேல் ஜெபித்தபோது அவன் வேண்டி கொள்ள தொடங்கியபோதே பதிலை ஆண்டவர் அனுப்பிவிட்டார். அப்படிப்பட்டதான ஜெபங்களாக நம் ஜெபங்கள் இருக்கும்படியாக தேவன் தாமே கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
.
ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்தத்தை பற்றிக் கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்யும்
..
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன், ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment