Tuesday, November 1, 2011

தேவன் நம் பட்சத்தில்

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள், பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். - யாக்கோபு 4:7.

ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒருவர் நின்று அங்கு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சிங்கம் இருந்த கூண்டுக்குள் அங்கு வேலை செய்கிற ஒரு மனிதன் தன் கையில் ஒரு துடைப்பத்துடன் (Broom) உள்ளே நுழைந்ததைப் பார்த்தார். அந்த மனிதன் அங்கு சுத்தம் பண்ண ஆரம்பித்தான். சிங்கம் இருந்த இடத்திற்கு வந்தவுடன் தன் கையில் உள்ள துடைப்பத்தால், அந்த சிங்கத்தை உசிப்பி விட்டவுடன், அந்த சிங்கம் அவனைப் பார்த்து ஒரு புர்ர்ர் என்று உறுமிவிட்டு, எழுந்து வேறிடத்தில் போய் படுத்துக் கொண்டது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர், ஓ, இந்த மனிதன் மிகவும் தைரியம் வாய்ந்தவனாக இருக்க வேண்டும், என்று எண்ணி, அந்த மனிதனிடம் போய், 'நீர் மிகவும் தைரியமாக இருக்கிறீர், தைரியமாக உள்ளே நுழைந்து அந்த சிங்கத்தை உசிப்பி விட்டீரே, அந்த சிங்கம் உம்மேல் பாய்ந்து கடிக்கும் என்று பயமில்லையா?' என்றுக் கேட்டார். அதற்கு அந்த மனிதன் 'இல்லை, நான் தைரியமானவன் இல்லை' என்றுக் கூறினான். அப்போது அந்த மனிதர், ‘ அப்படியானால் அந்த சிங்கம் நன்கு பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்றுக் கூறினார். அப்போது அந்த மனிதன், ‘நான் தைரியவானும் இல்லை, இந்த சிங்கம் பயிற்சி பெற்றதும் இல்லை, ஆனால் இந்த சிங்கம் வயதானது, அதற்கு பல்லும் இல்லை. அதனால் ஒன்றும் செய்ய முடியாது’ என்றுக் கூறி சிரித்தான்.
.
அப்படித்தான் நம் வாழ்விலும் பிசாசு வந்து சிலவேளைகளில் பயமுறுத்திப் பார்க்கிறான். ஆனால் அவன் தலையை கிறிஸ்து இயேசு சிலுவையில் நசுக்கி விட்டார். அவன் தோற்றுப் போனவன். 'தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்' யாக்கோபு. 5:8 என்றுப் பார்க்கிறோம். எந்த சிங்கமாவது விழுங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா? சிங்கம் என்றால் கடித்துச் சாப்பிடுமே ஒழிய விழுங்காது. பிசாசானவன் விழுங்கலாமோ என்று சுற்றித்திரிகிறான் ஏனென்றால்; அவன் பல் பிடுங்கப்பட்ட சிங்கம். அவன் தலையை நம் இயேசுகிறிஸ்து சிலுவையிலே நசுக்கிவிட்டார். அவன் கெர்ச்சித்து பயமுறுத்துவானே ஒழிய அவனால் ஒன்றும் செய்ய முடியாது.
.
அவன் உங்கள் வாழ்க்கையில் கெர்சிக்கிற சிங்கத்தைப் போல பயமுறுத்தலாம், ஆனால் அதைக் கண்டு பயந்து விடாதீர்கள். உங்கள் வேலை இடத்தில், உங்கள் அனுதின வாழ்க்கையில், அவன் பல தந்திர வேலைகளைச் செய்யலாம். ஆனால் பயப்படாதிருங்கள். உங்களுக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். நீங்கள் கர்த்தரை சார்ந்து ஜீவிப்பீர்களானால், உங்களுக்கு எதிராக கூட்டங் கூடினவர்கள் உங்கள் பட்சத்தில் வருவார்கள். தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாய் நிற்பவன் யார்?
.
உங்கள் வேலையிடங்களில், உண்மையாய் வேலை செய்யுங்கள், கடினமாய் உழையுங்கள். உங்கள் அதிகாரிகள் பார்க்க வேண்டும் என்று வேலை செய்யாமல் கர்த்தர் பார்க்கிறார் என்று வேலை செய்யுங்கள். கர்த்தர் உங்கள் பட்சத்தில் இருப்பதைக் காண்பீர்கள். என்னுடைய வேலையிடத்திலும், என் அதிகாரி காரணமில்லாமல் எனக்கு விரோதமாக இருந்தார்கள். ஆனால் விடாமல் அவர்களுக்காக அவர்கள் பெயரைச் சொல்லி ஜெபித்தேன். கர்த்தர் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப்போட்டார். கர்ததர் என் வேலையிடத்தில் விசேஷித்த ஞானத்தைக் கொடுத்து என்னை உயர்த்துவதை என்னால் நன்கு உணர முடிந்தது. கர்த்தர் நம்மோடு பயங்கர பராக்கிரமசாலியாய், ஞானம் நிறைந்தவராய், எல்லாவற்றிலும் நம்மை வழிநடத்துகிறவராய் இருக்கும்போது நாம் எந்த மோசமான அதிகாரிக்கும் கலங்க தேவையில்லை. நமக்கு விரோதமாய் எழும்பும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். ஆமென் அல்லேலூயா! கர்த்தர் நமக்கு வெற்றியைத் தருவார். அவரை மாத்திரம் விடாமல் பற்றிக் கொள்ளுங்கள்.
.
உனக்கெதிராய் எழும்பும் ஆயதம்
வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
நீர் அறியா யாதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணினீரே


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment