Wednesday, February 15, 2012

ஓடு ஓடு விலகி ஓடு


அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. - (2 தீமோத்தேயு 2:22).
. 
இந்த பூமியில் பிறந்த எவரும் பரிபூரண பரிசுத்தர்கள் அல்ல. வாலிப வயதிலே மாத்திரமல்ல, நடுத்தர வயதிலும் எதிர்பாலினத்தவருடைய அன்பை பெறவும், அன்பை காண்பிக்கவும் தீவிரப்படுவது இயற்கையானதே. நாம் பாலியல் உணர்வுகளோடுதான் படைக்கப்பட்டுள்ளோம். ஆனால் நாம் இவ்விஷயத்தில் தூய்மையை காத்து கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். பாலியல் சோதனையில் அகப்படும்போது, அச்சூழ்நிலையிலிருந்து தப்பி ஓடுவோமானால் நம் உடலையும், ஆத்துமாவையும் தப்புவித்து கொள்ள முடியும்.
. 
ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் பால் உறவில் தூய்மை என்பது தேடி கண்டுபிடிக்க வேண்டிய ஒன்றாயிற்று. பெற்றோருக்கு தெரியாமல் தவறான உறவில் ஈடுபட்டு, பின் கருக்கலைப்பு செய்கிற பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதில் அதிகமானோர் கல்லூரி மாணவிகளே! அதற்கு முக்கிய காரணம் தேவன் மனிதர்களுக்கு நியமித்திருக்கிற 'பால் உறவில் தூய்மை' என்னும் விதிமுறைககு விரோதமாக மனிதர், தேவபயமின்றி வாழ்வதே ஆகும்.
.
பால் உறவில் தூய்மையாக வாழ வேண்டும் என்கிற தீர்மானத்தில் உறுதியாய் இருக்கும்போது, அந்த தீர்மானத்தை உடைக்கும்படியாக தவறு செய்வதற்கான தனிமையான சந்தர்ப்பத்தை சாத்தானே உங்களுக்கு அமைத்து கொடுப்பான். வேதத்திலே யோசேப்பு தன்னை தவறு செய்யும்படி அழைத்த எஜனானின் மனைவியை விட்டு ஓடிப்போனதை போல நீங்களும் ஓடிப்போவதற்கு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். இன்றைக்கு அநேகர் பாவமான சூழ்நிலையில் இருந்து கொண்டே, பாவம் செய்யாமல் பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்று வாஞ்சித்தும், தொடர்ந்து பாவத்திற்கு அடிமையாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் ஒரு முறை பாவத்தில் விழுந்தவர்கள் அதை விட்டு வெளியே வருவது மிகவும் கடினமே! செய்து பார்த்தால் தான் என்ன என்று துணிவுடன் பாவத்தில் விழுபவர்கள் அதற்கு அடிமையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வெளியே வரவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் வெளியே வரமுடியாதபடி சூழ்நிலைகள் அமைந்து விடுகின்றன. ஆகவே பாவம் பழக்கமாகி போகுமுன், 'இது பாவ சூழ்நிலை' என்று தெரிந்தவுடன் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடியுங்கள். சிம்சோன் பாவ சூழ்நிலையை நோக்கி ஓடினான், முடிவு மரணம். யோசேப்பு பாவ சூழ்நிலையை விட்டு ஓடினான், முடிவு உயர்வு.
ஒரு முறை விழுந்தவர்கள் ஐயோ நான் விழுந்து விட்டேனே என்று விழுந்த இடத்திலேயே கிடக்காமல் எழுந்து, மன்னிப்பதில் தயவு பெருத்த கர்த்தரிடம் மன்னிப்பை பெற்று கொண்டு தூய்மையாக வாழ பிரயாசப்பட வேண்டும். அசுத்தத்திலேயே விழுந்து புரண்டு கொண்டு இருக்க கூடாது.
.
இந்த விஷயத்தில் நாம் தூய்மையாக இருக்க வேண்டுமென்றால் முதலாவது நம் இருதயத்தில் யோசேப்பை போல - (ஆதியாகமம் 39:9) எந்த சூழ்நிலையிலும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்ய கூடாது என்று தீர்மானம் பண்ணவேண்டும். அப்பொழுது பாவ சூழ்நிலைகளும், சோதனைகளும் வந்தாலும், நம் சிந்தனையிலும், செயலிலும் கர்த்தருக்கேற்ற தூய்மையோடு இருப்பதை கண்டு ஆச்சரியப்படுவோம்.
.
அடுத்ததாக நான் இந்த காரியத்தில் விழ சான்ஸே கிடையாது என்று ஓவர் நம்பிக்கை வைக்காமல் எப்போதும் ஜாக்கிரதையாய் இருப்போம். காரணம் பவுல் மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தை ஆலோசனையாக தன்னுடைய உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கே அவர் எழுதினார். அப்படியென்றால் உத்தமர்களும் சறுக்கி விட வாய்புள்ளதல்லவா?
.
இயேசுகிறிஸ்து தமக்கு வந்த மூன்று பாவ சோதனைகளையும் வேத வசனத்தை கொண்டே ஜெயித்தார். நாமும் வேத வசனத்தை கொண்டே பிசாசையும், இச்சைகளையும், அசுத்தங்களையும் ஜெயித்து என்றைக்கும் பாலியல் தூய்மையுள்ளவர்களாக, தேவன் விரும்பும் பரிசுத்தர்களாக வாழ்வோம். ஆமென் அல்லேலூயா!
.
வேசித்தனத்திற்கு விலகி ஓடு
இயேசுகிறிஸ்துவை நோக்கி ஓடு
நோக்கி ஓடு நீ நோக்கி ஓடு

.
ஓடு ஓடு விலகி ஓடு
வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு
ஓடு ஓடு தொடர்ந்து ஓடு
இயேசுகிறிஸ்துவை நோக்கி ஓடு

.
 

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment