Tuesday, January 3, 2012

கர்த்தரின் ஆசீர்வாதம்


நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன். 
 (ஆகாய் 2:19).

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும்  சி. ஐ. ஜி. எம். சபை  சார்பில் எங்களது அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். கர்த்தருடைய பெரிதான கிருபையால் நாம் இந்த புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்க தேவன் இரக்கம் பாராட்டி இருக்கிறார். நாம் நிற்பதும், நிர்மூலமாகாதிருப்பதும் அவருடைய சுத்த கிருபையே. அவருடைய இரக்கங்களுக்கு முடிவேயில்லை. ஆமென்.
.
இந்த புதிய வருடத்தின் வாக்குதத்தமாக தேவன் கொடுத்த அற்புதமான, ஆசீர்வாதமான வார்த்தை, 'நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன்' என்பதே. ஒருவேளை நாம் கடந்த வருடத்தில் அநேக பாடுகளின் வழியாக, துன்பத்தின் வழியாக, சாபங்களின் வழியாக கடந்து வந்திருக்கலாம். அப்படி கஷ்டத்தின் வழியாக கடந்து வந்த நம்மைத்தான் கர்த்தர் நோக்கி, 'நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன்' என்று வாக்குதத்தம் செய்கிறார்.
.
'சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்' (சகரியா 8:13). ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நாம் ஒருவேளை மற்றவர்களுக்கு முன்பாக கடந்த வருடத்தில் சாபமாக, அவர்கள் நம்மை பழித்து கூறும்படியாக, அவர்களுக்கு முன்பாக நாம் ஒன்றுமில்லாதவர்களாக, பிரயோஜனமற்றவர்களாக இருந்திருப்போமானால், கர்த்தர் நாம் அப்படி இருந்த இடத்திலே நம்மை ஆசீர்வாதமாக இருக்கும்படி நம்மை உயர்த்த போகிறார். அல்லேலூயா! நம்முடைய சாபமான வாழ்க்கையை மாற்றி, அவர் நம்மை இந்த வருடத்தில் அநேகருக்கு ஆசீர்வாதமாக நம்முடைய வாழ்க்கையை மாற்றப்போகிறார்.
.
கர்த்தருடைய வாக்குதத்தங்கள் எல்லாம் ஆம் என்றும் ஆமென் என்றும் இருந்தாலும், அதாவது அவை அப்படியே நம் வாழ்வில் நடந்தேறும் என்றாலும், அவருடைய ஆசீர்வாதங்கள், வாக்குதத்தங்கள் அனைத்துமே ஒரு நிபந்தனையோடேயே கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் எத்தனையோ ஊழியர்கள் கர்த்தர் உங்களை இவ்விதமாய் ஆசீர்வதிப்பார் என்று எத்தனை எத்தனை ஆசீர்வாதங்களை கூறினாலும், கர்த்தருடைய வார்த்தையின்படி நாம் செய்யாத பட்சத்தில் எந்த ஆசீர்வாதமும் நம்மிடம் நிலைக்காது. வேதம் கூறுகிறது, உபாகமம் 28:1ல் 'இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்' என்றும், இன்னும் பல ஆசீர்வாதங்கள் அந்த அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது. அவை எப்போது நமக்கு கொடுக்கப்படும் என்றால் அவருடைய கட்டளையின்படி நாம் செய்ய கவனமாயிருக்கும்போது மாத்திரமே.
.
இஸ்ரவேலர் பாபிலோனியரால் சிறைபிடிக்கப்பட்டு, பின் தங்கள் சிறையிருப்பில் இருந்து மீண்டும் தங்கள் நாட்டில் வந்து சேர்ந்தபோது, அவர்கள் தேவனுடைய ஆலயத்தை கட்ட ஆரம்பிக்கிறார்கள். அப்படி அவர்கள் கட்ட ஆரம்பிக்கும்போது, அநேக தடைகள் வர ஆரம்பிக்கின்றன. அதை கண்ட அவர்கள் ஆலயத்தை கட்டுவதை நிறுத்திவிட்டு, அதை குறித்து அவர்கள் மறந்து போகிறார்கள். ஏறக்குறைய பதினாறு ஆண்டுகள், கர்த்தருடைய ஆலயம் கட்டப்படுவதை அவர்கள் மறந்து, அதை குறித்து கவலையற்றவர்களாக இருக்கும்போது, தேவன் ஆகாய் தீர்க்கதரிசியின் மூலம் பேச ஆரம்பிக்கிறார். அவர்கள் தேவனுடைய ஆலயத்தை கட்டுவதை குறித்து கவலையற்றவர்களாக இருக்கும்போது, தேவனும் அவர்களை ஆசீர்வதிப்பதை நிறுத்தி விடுகிறார். 'நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான். உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்' என்று ஆகாய் தீர்க்கதரிசியின் மூலம் கர்த்தர் பேசினபோது, அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து மீண்டும் ஆலயத்தை கட்டுவதை குறித்து சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் அப்படி முயற்சி செய்ய ஆரம்பித்தபோது, கர்த்தரும் அவர்களை ஆசீர்வதிக்க ஆரம்பிக்கிறார். 'களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே; நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார்' (ஆகாய் 2:19).ஆம் இத்தனை நாள் திராட்ச செடியும், அத்திமரமும், மாதளஞ்செடியும், ஒலிவமரமும் கனி கொடுக்காமற் போனாலும், நீங்கள் உங்கள் வழிகளை சிந்தித்து பார்த்து கர்த்தருடைய ஆலயத்தை கட்டுவதை குறித்து தீர்மானித்து அதற்கான அஸ்திபாரத்தையும் போட்டு ஆரம்பித்து விட்டபடியால் நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் கூறினார்.
.
பிரியமானவர்களே, புதிய ஏற்பாட்டு காலத்தில் நாமே தேவ ஆலயமாயிருக்கிறோம் என்று வேதம் கூறுகிறது. 'நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?' (1 கொரிந்தியர் 3:16) என்று வேதம் கூறுகிறது. அப்படி தேவனுடைய ஆவியானவர் வாசம் செய்கிற தேவனுடைய ஆலயமாயிருக்கிற நம்முடைய உள்ளத்தில், சரீரத்தில் நாம் பாவத்தை வைத்து கொண்டிருந்தால் தேவன் நம்மை ஆசீர்வதிப்பதெப்படி? நாம் அவருடைய கற்பனைகளையும், கட்டளைகளையும் செய்ய மறந்து, நம் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருந்தால், தேவன் நம்மை ஆசீர்வதிப்பதெப்படி? இஸ்ரவேலர் 16 ஆண்டுகள் தேவனுடைய ஆலயத்தை குறித்து மறந்து ஜீவித்தபடியால் அவர்களை தேவன் சிறுகப்பண்ணினார். ஆனால் எப்போது அவர்கள் தங்கள் வழிகளை சிந்தித்து பார்த்து, கர்த்தரிடம் திரும்பினார்களோ, அன்றிலிருந்து தேவன் அவர்களை ஆசீர்வதிக்க ஆரம்பித்தார். நாமும் கூட நம் பாவ வழிகளை விட்டு, நம் தேவனிடம் திரும்பும்போது, தேவனும் நம்மை பார்த்து, நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று ஆசீர்வதிப்பார். அல்லேலூயா!

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment