Tuesday, January 17, 2012

பிறரை நேசிக்கும் நேசம்

உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக. - (மத்தேயு 22:39).

 .
ஒரு போர் வீரன் வியட்நாம் போர் முடிந்து, தன் வீட்டிற்கு திரும்பும் நேரம் வந்தது. சான் பிரான்சிஸ்கோ நகரில் தன் பெற்றோரை அவன் போனில் அழைத்து, நான் வீட்டிற்கு வரப்போகிறேன். ஆனால் உங்களிடம் ஒரு உதவியை கேட்கிறேன். என்னோடு என் நண்பனும் வர இருக்கிறான்' என்று கூறினான். அதற்கு பெற்றோர்கள், 'ஓ, தாராளமாக கூட்டி கொண்டு வா, அவனை நாங்களும் பார்க்க ஆவலாய் இருக்கிறோம்' என்றார்கள்.
.
அதற்கு மகன், ' அவன் நடந்த போரில் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணியில் காலை வைத்ததினால், அவனுடைய ஒரு காலும், ஒரு கையும் இழந்து விட்டான். அவனுக்கு யாரும் இல்லாததால் அவன் என்னோடு இருப்பதை விரும்புகிறேன்' என்று கூறினான்.

.
பெற்றோர், 'மகனே, அதை கேட்க மிகவும் விசனமாயிருந்தாலும், அவனை நாம் வேறொரு இடத்தில் தங்க வைக்க ஆயத்தப்படுத்துவோம். நம்மோடு அவன் இருக்க முடியாது. அவனை வைத்து பார்த்து கொள்வது என்பது மிகவும் கஷ்டம் என்று உனக்கு தெரியும். இந்த வயதான காலத்தில் எங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு பாரம் இருக்குமானால் மிகவும் கஷ்டம். இதை புரிந்து கொண்டு, அவனை வேறு இடத்தில் விட்டுவிட்டு, நீ மட்டும் வா' என்று கூறினர். மகன் போனை வைத்து விட்டான்.

சிறிது நாட்கள் கழித்து, சான் பிரான்சிஸ்கோ நகர போலீஸ் அந்த பெற்றோரை அழைத்து, 'உங்கள் மகன் ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டான். நீங்கள் வந்து பார்த்து அது உங்கள் மகன் தானா என்று உறுதி செய்யுங்கள்' என்று கூறினார்கள். உடனே பதைத்து, பெற்றோர் போய் பார்த்த போது, அது அவர்களின் மகன்தான் என்று தெரிந்தது. அப்போது அவர்களுக்கு தெரியாத ஒரு காரியமும் இருந்தது. அவனுக்கு ஒரு கையும் காலும் இல்லாமல் இருந்தது.
.
பிரியமானவர்களே, நம்மில் அநேகரும் அப்படித்தான் இருக்கிறோம். நம்மை போல எல்லாவற்றையும் உடையவர்களாகவும், அழகாயும், அறிவாயும் இருந்தால் அவர்களோடு பழக துடிக்கிறோம். பழகுகிறோம். ஆனால், நம்மை விட அழுக்காயும், உடல் ஊனமுற்றவர்களாக இருந்தால், அவர்களை நாம் தவிர்க்கவே விரும்புகிறோம். மேலே சொல்லப்பட்ட கதையில் அந்த பெற்றோர் தங்கள் பிள்ளைதான் ஊனமடைந்திருக்கிறான் என்று தெரிந்திருந்தால் நிச்சயமாக வீட்டிற்கு அழைத்து அவனை பராமரித்திருந்திருப்பார்கள். ஆனால் வேறு யாரோ என்று நினைத்து, அவனுக்காக நான் ஏன் இதை செய்ய வேண்டும் என்று நினைத்ததினாலேயே அவர்கள் தங்கள் சொந்த மகனையே இழக்க வேண்டியதானது.
.
நமக்கு ஒருவர் உண்டு. அவரின் அன்பு நிபந்தனையற்றது. அவர் நாம் எத்தனைதான் அழகற்றவர்களாயிருந்தாலும், அறிவற்றவர்களாயிருந்தாலும் நம்மையும் நேசித்து, நம்மை பராமரித்து, போஷித்து காத்து வழிநடத்தும் நம் தேவன். அவர் பட்சபாதமில்லாதவர். அவருடைய பிள்ளைகள் என்று சொல்லி கொள்ளும் நாமும் அப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதையே அவர் விரும்புகிறார். 'அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்' (மத்தேயு 25:37-40) என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். நாம் மற்றவர்களுக்கு செய்யும் நன்மையான காரியம் அது தேவனுக்கே செய்தது போலாகும்.

நம்மால் இயன்றதை மற்றவர்களுக்கு உதவியாக செய்வோமா? உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்ற கற்பனையை நிறைவேற்றுவோமா? நமக்கு உதவி செய்ய முடியும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்கு செய்யாமல் இருக்க கூடாது. நிச்சயமாய் செய்வோம். நம் பலன் பரலோகத்தில் சேர்த்து வைக்கப்படும். ஆமென் அல்லேலூயா!
.
பசியுற்றோருக்கு பிணியாளிகட்கு
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே
தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment