Saturday, December 24, 2011

வார்த்தை மாம்சமானார்

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. - (யோவான் 1:14).

ஒரு நாட்டை சேர்ந்த மன்னர் தன் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறியும்படி அடிக்கடி வேஷம் மாறி, மக்களோடு கலந்து என்ன சொல்கிறார்கள் என்று கேட்பது வழக்கம். ஒரு முறை அவர் அப்படி சென்ற போது, பொது குளியலறையில், அங்கு தண்ணீரை சூடுபடுத்தும் தொழிலாளி இருப்பதை கண்டார். முன்பு இப்போதிருக்கும் ஹீட்டர் போன்ற சாதனங்கள் இல்லாமலிருந்த நிலைமை. அப்போது அந்த மனிதனிடம் மன்னர் பேசி, அந்த மனிதனை அவருக்கு பிடித்து போயிற்று. தினமும் அவர் அவனுடன் வந்து பேசி போவது வழக்கானது. ஒரு நாள் அவர் அந்த மனிதனிடம் 'நான் தான் இந்த நாட்டு மன்னர்' என்று கூறினார். அதை கேட்ட அந்த மனிதன் மிகவும் ஆச்சரியப்பட்டான். மன்னர் அவன் தன்னிடமிருந்து பொருள், வசதிகளை கேட்க போகிறான் என்று நினைத்தார். ஆனால் அவனோ அவரிடம் ஒன்றுமே கேட்கவில்லை. அப்போது மன்னர், 'நான் மன்னர், எது வேண்டுமானாலும் நீ கேள், உனக்கு நான் தருகிறேன்' என்று கூறினார். அதற்கு அந்த மனிதன், 'மன்னரே, நான் ஒரு மிகவும் தாழ்மையுள்ள நிலையில் உள்ளவன் என்றும், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாதவன் என்றும் நீர் அறிந்தும் என்னிடம் தினமும் வந்து, உங்களையே என்னிடம் தந்து விட்டீர்களே, அதை விட எனக்கு என்ன வேண்டும்?' என்று கண்ணீர் மல்க கேட்டான்.
.
பிரியமானவர்களே, நம் இயேசுகிறிஸ்துவும் பரலோகத்தின் மகிமையை விட்டுவிட்டு, தூதர்களின் பணிவிடைகளை தள்ளிவிட்டு, எப்பொழுதும் துதிபாடி கொண்டிருக்கும் துதிகளில், வாசமாயிருப்பதை விட்டுவிட்டு, நாம் யாவரும் வாஞ்சிக்கும் பரலோக ராஜ்யத்தின் உயர்ந்த நிலைமையை விட்டுவிட்டு எத்தனை தாழ்மையாக இந்த உலகத்தில் வந்து உதித்தாரே அவர் எத்தனை நல்ல தெய்வம்!! அவர் 'தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்' (பிலிப்பியர் 2:6-8) என்று வேதம் கூறுகிறது. அவர் யாரோ ஒரு தெய்வம் அல்ல, அவர் வானத்தையும் பூமியையும், சமுத்திரத்தையும், அவற்றில் வாழும் அனைத்தையும் உருவாக்கினவர். அவர் தேவனுக்கு சமமாயிருந்தாலும், தம்மை வெறுமையாக்கி, தம்மை ஒரு அடிமை போல ரூபம் கொண்டு, மனுஷ உருவெடுத்து, நமக்கு இரட்சிப்பை கொடுக்கும்படி தம்மை தாழ்த்தின தேவன் அல்லவா?
.
உலகமெங்கும் இந்த நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தேவன் தமது ஒரே பேறான குமாரனாகிய கிறிஸ்துவை நமக்காக கொடுத்து அன்பை நினைத்து அவருக்கு நன்றி சொல்லுவோம். நமக்காக அடிமையின் ரூபமெடுத்து, மனிதனாக அவதரித்த கிறிஸ்துவின் அன்பை நினைத்து அவருக்கு நன்றி சொல்லுவோம். அவரை சிறு குழந்தையாக எண்ணி அவருக்கு தாலாட்டு பாட்டு பாடாமல், அவர் இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தை எப்படி நிறைவேற்றினார் என்பதை நினைத்து, அவருடைய இரண்டாம் வருகையில் நாம் காணப்படத்தக்கதாக அதற்கு நம்மை ஆயத்தமாக்குவோம்.
.
'கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்' (அப்போஸ்தலர் நடபடிகள் 1:11). ஆம், மறுபடியும் அவர் சீக்கிரமாய் வரப்போகிறார். தாழ்மையின் கோலமெடுத்து அல்ல, அகில உலகத்தையும் நியாயந்தீர்க்கும் நியாதிபதியாக வரப்போகிறார். 'இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது' (வெளிப்படுத்தின விசேஷம் 22:12)என்று கூறினபடி, நாம் செய்த ஒவ்வொரு நல்ல, கெட்ட காரியத்திற்கும் ஏற்ற பலனை கொடுக்கும்படி வருவார். அவரை எதிர்கொள்ளும்படியாக நம்முடைய கிரியைகள் காணப்படும்படி ஆயத்தமான நிலையில் நாம் வாழும்படி தேவன் தாமே கிருபை செய்வராக. ஆமென் அல்லேலூயா!
.
தம்மை விரோதித்த அவபக்தரை
செம்மை வழிகளில் செல்லாதோரை
ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே
அந்நாளிலே நியாயந் தீர்த்திடுவார்
..
தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்
பூலோக மக்களும் கண்டிடுவார்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment