Monday, November 21, 2011

சாத்தானின் தந்திரங்கள்


சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு, அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே- (2 கொரிந்தியர் 2:11).

ஒரு முறை சாத்தான் எல்லா பிசாசுகளையும் அழைத்து, சுவிசேஷம் காட்டு நெருப்பு போல பரவி கொண்டிருக்கிறது என்றும், எப்படியாவது சுவிஷேத்தை அழிக்க வேண்டும் என்றும், அதற்கு உபயோகமான திட்டங்களை கொடுக்கும்படி கேட்டு கொண்டான். எல்லா பிசாசுகளும் சற்று நேரம் அமைதியாக இருந்தன.

'நாம் பைபிளே இல்லாதவாறு அழித்து விடுவோம், அப்போது யாருக்கும் தேவன் ஒருவர் இருப்பதே தெரியாது' என்று ஒரு பிசாசு கூறியது. அதற்கு சாத்தான், 'நாம் எத்தனையோ நூற்றாண்டுகளாக அதை முயற்சித்து வருகிறோம் என்று உனக்கு தெரியாதா, நாம் அதை அழிக்க அழிக்க, அது கிறிஸ்தவர்களுக்கு விசேஷித்ததாக மாறிவிடுகிறது. அதை அழிக்க நினைத்த மனிதர்கள் தான் அழிந்தார்களே தவிர வேதாகமம் அழியவே இல்லையே' என்று கூறியது.
.
திரும்பவும் அமைதி ஏற்பட்டது. எல்லா பிசாசுகளும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தன. பின்னர், ஒரு பிசாசு எழுந்து, 'பொதுவாகவும் பகிங்கரமாகவும் கிறிஸ்தவர்கள் செய்யும் ஜெபங்களை தடுத்து விடுவோம். அதன்பின் யாருக்கும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க பெலனும், தைரியமும் இராது' என்று கூறியது. அதற்கு சாத்தான், 'அந்த முயற்சியில் நாம் ஏற்கனவே ஈடுபட்டு அமெரிக்காவில் எல்லா பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் பகிரங்கமாக ஜெபிப்பதை நிறுத்தி விட்டோமே, ஆனால் அதினால் ஒவ்வொரு கிறிஸ்தவனின் தனி ஜெபமும் அதிகமாகி விட்டது. ஆகையால் முன்னிருந்ததை விட இப்போது சுவிசேஷம் வேகமாக பரவி வருகிறது' என்று கவலைப்பட்டான்.
.
ஒரு பிசாசு எழுந்து 'எல்லா தேவாலயங்களையும் அழித்து விடுவோம், பின் ஒருவரும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க முடியாது' என்று கூறியது. அதற்கு சாத்தான், 'இதையும் நாம் ஏற்கனவே எத்தனையோ முறை செய்து விட்டோம், சீனாவில் வெளியே ஒரு சபைக்கூட இல்லாதவாறு செய்தோம், ஆனால் இரகசிய சபைகள் எழும்பி இப்போது இலட்ச இலட்சமாய் சீனாவில் கிறிஸ்தவர்கள் பெருகி வருகிறார்கள்' என்று கவலைப்பட்டது.
.
ஒரு பிசாசு எழுந்து, ' நாம் ஒவ்வொரு கிறிஸ்தவனையும் துன்புறுத்துவோம். கொலை செய்வோம். அவர்கள் இருதயத்தில் ஒரு பயம் வந்து, ஒருவரும் மற்றவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்ல முடியாதபடி போய் விடும்' என்று கூறியது. அதற்கு சாத்தான், 'போடா முட்டாள், அதை செய்யாமலா இருக்கிறோம்? நைஜீரியாவில் எத்தனை பேரை அப்படியே சபையோடு எரித்து விட்டோம்! நாம் அவர்களை கொல்ல கொல்ல அவர்களின் இரத்தமும், அவர்களின் சாவும் ஒரு புதிய சபை தோன்றுவதற்கு அந்த இடத்தில் விதைக்கப்படுகிறது. ஆதி திருச்சபை உருவானதில் இருந்து நாம் ஒவ்வொரு கிறிஸ்தவனையும் துன்புறுத்தி கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நாம் தான் தோற்று கொண்டிருக்கிறோமே தவிர கிறிஸ்தவம் இன்னும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது, சபைகளும் பெருகி கொண்டு தான் இருக்கிறது. யாரும் உருப்படியான ஒரு யோசனை சொல்ல மாட்டீர்களா?' என்று பெருமூச்சு விட்டது.
.
கடைசியாக ஒரு பிசாசு எழுந்து, 'நான் ஒரு திட்டத்தை சொல்ல போகிறேன், கவனமாக கேளுங்கள், நாம் கிறிஸ்தவர்களிடம் நீங்கள் போய் கர்த்தருக்காக கடினமாக உழையுங்கள், கூடி ஜெபியுங்கள், தனித்து ஜெபியுங்கள், வேதத்தை தினமும் வாசியுங்கள், சபைகளை சபைகள் இல்லாத இடங்களில் ஸ்தாபியுங்கள், கர்த்தருக்காக வைராக்கியமாக காரியங்களை செய்யுங்கள், ஆனால் இன்று வேண்டாம், ஏனெனில் நீங்கள் ஏற்கனவே அதிக வேலை செய்து ரொம்பவும் களைப்பாக இருக்கிறீர்கள், ஆகவே நாளைக்கு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு, நாளை திரும்பவும், எல்லாம் செய்யுங்கள், ஆனால் நாளை செய்யுங்கள் என்று ஒவ்வொரு நாளும் அவர்கள் வேதம் வாசிப்பதையும், ஜெபிப்பதையும் செய்ய இருக்கும் மற்ற காரியங்களையும் அடுத்த நாள் அடுத்த நாள் என்று தள்ளி போட்டு கொண்டே வருவோம். அவர்கள் கடைசியில் ஒன்றுமே செய்ய மாட்டார்கள்' என்று கூறியது. உடனே எல்லா பிசாசுகளும், சாத்தானும் பலமாக கைகளை தட்டி, ' ஆஹா, நல்ல ஐடியா!' என்று கூறி ஏகமாய் ஆர்ப்பரித்தன. அதன்படி செய்ய ஆரம்பித்து வெற்றியும் கண்டு கொண்டிருக்கின்றன.
.
பிரியமானவர்களே, நாம் கர்த்தருக்காக என்னென்னவோ செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறோம், வாஞ்சிக்கிறோம். ஆனால் செய்ய வேண்டிய நேரம் வரும்போது, இப்போது வேண்டாம், நாளைக்கு வைத்து கொள்வோம் என்று தள்ளி போட்டு கொண்டே இருக்கிறோமல்லவா? நாளையிலிருந்து ஒரு மணி நேரமாவது ஜெபிக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறோம், அதன்படி செய்ய உட்காரும்போதுதான், யாராவது வந்து பேசி பேசி நேரம் போவது தெரியாமல் பேசி விட்டு, ஐயோ இன்று ஜெபிக்கவில்லையே, நாளைக்கு ஜெபிப்போம் என்று தள்ளி போட்டு விடுகிறோம். நாமாக ஏதாவது முயற்சி செய்து ஆரம்பிக்காதவரை நாம் ஒரு போதும் ஒரு காரியத்தையும் செய்யவே முடியாது. தீர்மானங்கள் ஆயிரம் செய்யலாம், ஆனால் அதற்கென்று முயற்சி செய்யாதவரை ஒன்றும் நடைமுறைக்கு வர முடியாது.
.
உபவாசித்து ஜெபிக்க வேண்டும் என்று தீர்மானித்தால், ஒரு நாளை அதற்கென்று நியமித்து, அன்று நிச்சயமாக ஜெபித்து ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த தீர்மானம் எடுத்ததால் எந்த பிரயோஜனமுமிருக்காது. ஒரே நாளில் இரண்டு மணி நேரம் ஜெபித்து விட்டு, பின் ஒரு வாரத்திற்கு ஜெபிக்காமல் இருப்பதும் தவறு. கொஞ்ச கொஞ்ச நேரமாக ஆரம்பிப்போம், ஒவ்வொரு நாளாக அதை அதிகமாக்குவோம். இது உடற்பயிற்சி செய்ய நாம் எப்படி கொஞ்ச கொஞ்சமாக ஆரம்பித்து பின் அதிகமாக்குகிறோமோ அதை போலத்தான், படிப்படியாக உயர்த்தும்போது நாம் கடைசியில் இவ்வளவு நேரமா ஜெபித்திருக்கிறோம் என்று நாமே ஆச்சரியப்படும் அளவிற்கு நாம் ஜெப வாழ்வு உயர்ந்திருக்கும்! அப்படிப்பட்ட ஜெப வாழ்வை, கர்த்தருக்காக வாழும் வாழ்வை, கர்த்தருக்காக செய்யும் பெரிய காரியங்களை தேவன் நம் ஒவ்வொருவருக்கும் வாய்க்க செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
.
சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
உயிர் பெற செய்பவரே
சாத்தானின் சகல தந்திரங்களை
தகர்த்தெறிய வாரும் ஐயா
ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
அன்பினால் இன்று அலங்கரியும்

4 comments:

  1. //நாம் அவர்களை கொல்ல கொல்ல அவர்களின் இரத்தமும், அவர்களின் சாவும் ஒரு புதிய சபை தோன்றுவதற்கு அந்த இடத்தில் விதைக்கப்படுகிறது. //
    True!

    ReplyDelete