Wednesday, November 23, 2011

பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம்

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். - (ரோமர் 2:2).
.
ஒரு குடியானவன் தான் வளர்க்கும் புறாக்களுக்கெல்லாம் நல்ல ஆகாரத்தை போடுகிறான் என்று ஒரு காகம் கவனித்து, தான் புறா வேஷம் போட்டு கொண்டால் கஷ்டப்பட்டு உணவை தேடி அலைய வேண்டுவதில்லை என எண்ணியது. ஆகவே ஒரு சுண்ணாம்பு குழியிலே போய் புரண்டு புரண்டு படுத்து தன்னை வெண்மையாக்கி கொண்டது. புறாவை போல புதிய நடையும் கற்று கொண்டது. அடுத்த நாள் குடியானவன் புறக்களுக்கு ஆகாரம் கொடுக்கும்போது தானும் ஒரு புறாவை போல நின்று அருமையான உணவை உட்கொண்டது. இப்படி அநேக நாள் இந்த திருட்டு காகம் அவரை ஏமாற்றி கொண்டே வந்தது.
.
ஒரு நாள் அந்த பக்கத்தில் எலி செத்து கிடக்கும் நாற்றம் அடித்தது. மற்ற காகங்களெல்லம் கூடி வந்து காகா என்று கத்தி கொண்டு செத்த எலியை விருந்துண்ண ஆரம்பித்தன. புறா வேஷம் போட்ட காகத்திற்கு தன்னையும் அறியாமல் ஜென்ம சுபாவம் தலையெடுத்தது. புறாக்களின் மத்தியிலிருந்து கா கா என்று கத்தி கொண்டு செத்த எலியை நோக்கி பறந்தது. அதை பாhத்த குடியானவனுக்கு நல்ல கோபம் வந்தது. இனிமேல் வேஷம் போட்ட காக்கா வரட்டும் என்று எண்ணி கொண்டான்.
.
காகத்தின் வேஷத்தை கண்ட மற்ற காகங்கள் அதை விரட்டியடித்தன. உயிர் பிழைத்தால் போதும் என எண்ணி குடியானவனிடம் வந்தது. அவனோ கோலை வைத்து அதை அடித்து துரத்தினான். இங்கும் போக முடியாமல், அங்கும் செல்ல முடியாமல் அந்த காகம் தவித்தது.
.
இந்நாட்களிலே கிறிஸ்தவர்களில் அநேகர் நேரத்திற்கு தகுந்தாற் போல், இடத்திற்கு தகுந்தாற்போல் வேஷம் போட கற்று கொண்டுள்ளார்கள். ஆலயத்தில் விசுவாசிகளை காணும்போதும், போதகரிடம் பேசும் போதும் பரிசுத்த வேஷம் தரித்து கொள்வார்கள். பேச்சு, பார்வை, பாவனை அனைத்தும் பரிசுத்தமாகி விடுகிறது. அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்து உலகதிற்குள் வந்து வீட்டிற்கு வந்தவுடன் பேச்சு செயல் எல்லாமே மாறி விடுகிறது.
.
ஆனால் தேவன் நமது வெளிவேஷத்தை கண்டு ஏமாறுபவர் அல்ல, அவர் நமது உள்ளந்திரியங்களை ஆராய்ந்து அறிகிறவர். அவரிடம் வரும்போது மட்டும் பரிசுத்த வேஷம் தரித்து அவரை பரவசப்படுத்த முடியாது. ஆகவே நாம் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷத்தை தரிக்காதபடி, நம் மனம் புதிதாக ஒவ்வொரு நாளும் மாற வேண்டும்.
.
எப்படி நம் மனதை புதிதாக மாற்ற முடியும்? ஓவ்வொரு நாளும் காலையில் நாம் எழுந்திரிக்கும்போது, நம் மனதையும், சிந்தனைகளையும், எண்ணங்களையும் கர்த்தருடைய கரத்தில் கொடுத்து, அவர் நம்முடைய சிந்தனைகளை ஆளும்படி ஒப்பு கொடுக்க வேண்டும். டெலிவிஷனுக்கும், பேஸ் புக்கிற்கும் கொடுக்கும் நேரத்தில் பாதியையாவது கர்த்தருக்கு கொடுக்கும்படி பழக வேண்டும். அப்படி கர்த்தருக்கு கொடுக்கும்போது, நம் எண்ணங்களும், சிந்தனைகளும் புதிதாக்க மாற்றப்படும். உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றுமாக நாம் வேஷம் தரிக்கமுடியாது.
.
ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய சமுகத்தில் நம் மனம் புதிதாக்கப்படுகிறபடியால், பாவத்திற்கு விலகி, கர்த்தருக்குள் எப்பொழுதும் நாம் வாழ முடியும். அவருடைய சிந்தனை நம்மை ஆட்கொள்வதால், கர்த்தர் நம்மோடு எப்போதும் இருப்பதை உணர முடியும். அவருடைய சித்தத்தை பகுத்தறிந்து அவருக்குள் வளருவதால், நம் மனம் புதிதாகி மறுரூபமாக நாம் வாழ முடியும். அப்படிப்பட்டதான ஒரு வாழ்வை கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
.
கண்களை பதிய வைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன் செல்லுவோம்

1 comment: