Monday, November 7, 2011

நிறைவாக்குகிற தேவன்

என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். 
- பிலிப்பியர் - 4:11 .

உலக இசை ஞானிகளில் மிகவும் சிறந்தவரான பீத்தோவன்(Ludwig Van Beethoven) தன் சிறுவயதில் பட்டபாடுகளைக் குறித்து ஒரு சிலருக்குத்தான் தெரியும். அவருடைய உருவத்தை வைத்து, அவரோடு இருந்த மாணவர்கள் அவரை கிண்டல் செய்ததுண்டு. வீட்டில் அவருடைய குடிகார தகப்பன் அவருடைய தாலந்தைக் கண்டுக் கொண்டு அவரால் தனக்கு பண உதவி வரும் என்று, அவரை இன்னொரு குடிகார ஆசிரியரிடம் பியானோ படிக்க வைத்தார். இந்த இரண்டு பேரும் அவரை படுத்தின பாடுகள் அதிகம். அடி உதைகள், பாடங்கள் என்று மிக இளவயதில் வெகுபாடுகள் பட்டார். அவரது அன்னை மாத்திரம் அவரை உற்சாகப்படுத்தி, 'மகனே, உறுதியாயிரு, நீ ஒரு காலத்தில் பெரிய மேதை ஆவாய்' என்று தைரியப்படுத்துவார்கள். அதன்படி, அவர் தனது பதினொரு வயதில் மிகவும் இசையில் சாதுரியம் உளளவராய், தனனுடைய சொந்த பாடல்களை இயற்றக்கூடியவராகவும், ஒரு முழு குழுவையும் நடத்தும் தாலந்து பெற்றவராகவும் மாறினார். தனது 17 வயதிற்குள் வியன்னா போய் அங்கு கற்றறிந்து மிகவும் பிரபலமாகத் தொடங்கினார்.
.
அவர் தமது 24 வயதில் காது கேட்கும் தன்மையை இழக்க ஆரம்பித்தார். தனது 47 ம் வயதில் முற்றிலும் கேட்கும் தன்மையை இழந்தார். மட்டுமல்ல, வாத நோய் (Rhematism)அவரை தாக்கியது. இக்காலத்தில் உள்ளதுப் போல அக்காலத்தில் மருந்து கண்டுபிடிப்பு இல்லை. அதனால் அவர் தொடர்ந்து வேதனையினால் பாதிக்கப்பட்டாலும், தன் வலியை மறந்து, தன் இயலாத தன்மைகளை கண்டு புலம்புவராக இல்லாமல், தன் கவனம் முழுவதையும் பாடல்களை இயற்றி அவற்றை இசையமைக்க ஆரம்பித்தார். அவருக்கு பின் வந்த அநேக இசை மேதைகளுக்கு அவரின் இசையமைப்புகள் பெரிய உதவியாயிருந்தன.
.
தனது சாவுப்படுக்கையில் அவரின் விசுவாசம், 'நான் பரலோகம் போகும்போது என் காது நன்கு கேட்கும்' என்பதாகும். உலகில் ஞானிகளாய் இருந்தவர்கள் தங்களது குறைவுகளிலும், தேவன் தங்களுக்கு தந்த தாலந்துகளை முழு அளவு பிரயோஜனப்படுத்த தயங்கவில்லை. பாடுகள் ஒரு புறம் இருந்தாலும், அவைகள் தங்களது வாழ்வின் முழுமையையும் ஆட்கொண்டுவிடாதபடி, முறுமுறுத்துக் கொண்டிருக்காதபடி, தங்களது குறைச்சலிலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டார்கள்.
.
அப்போஸ்தலனாகிய பவுல், 'தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்பதியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு' என்று பிலிப்பியரில் கூறுகிறார். என்ன ஒரு சவால் விடும் வசனம்! நமக்கு நாம் இருக்கும் இடத்திலிருந்து ஏதோ வேலையாக வேறிடத்திற்கு வரும்போது கொஞ்சம் வசதிகள் குறைவாக இருந்தால், எத்தனை முறுமுறுப்பு, எத்தனை வாக்குவாதங்கள். மிகவும்படித்த மேதையான பவுல், கிறிஸ்துவுக்காக தனது மேன்மை கல்வி எல்லாவற்றையும் இழந்து தைரியமாக சொல்கிறார், தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும் என்று.
.
நாமும் யாருக்கும் குறைந்தவர்களல்ல, ஆனால் எந்தக் குறைவிலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு அது இல்லையே இது இல்லையே என்று முறுமுறுத்துக் கொண்டிருக்காமல், தேவன் நமக்கு என்று கொடுத்திருக்கிறதை சந்தோஷமாக அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். குறைவிலும் நிறைவாயிருக்க கற்றுக் கொண்டோமானால் நம்மை வெல்வதற்கு யாருமில்லை.
.
நம்முடைய குறைவுகளை எல்லாம் நிறைவாக்குகிற தேவன் இயேசுகிறிஸ்து நம்மோடிருப்பதால் நாம் எதைக் குறித்தும் கலங்க தேவையில்லை. அப்போஸ்தலனாகிய பவுலினால் குறைவுகளிலும் நிறைவாகயிருக்க முடியும் என்றால் ஒரு பீத்தோவனால் முடியும் என்றால் ஏன் நம்மால் முடியாது? நம் குறைவுகளிலும் தேவனுக்கென்று சாதிப்போம், நிறைவாக வாழ்ந்துக் காட்டுவோம். ஆமென் அல்லேலூயா!
.
என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment