Tuesday, February 21, 2012

வேதத்தின் புதையல்களை தேடுவோம்


நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு,.. அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். - (நீதிமொழிகள் 2:2,4,5).
.
ஒரு வயதான மூதாட்டியை அவருடைய சொந்தக்கார மனிதர் ஒருவர் கவனித்து வந்தார். அந்த மூதாட்டி மரிக்கும்போது, உயிலில் அவருக்கு ஒரு வேதாகமத்தையும், அதிலுள்ள அனைத்தும், மற்றும் தான் இருக்கும் எஸ்டேட்டை எல்லா கடன்களும் அடைத்தப்பின் மிச்சம் இருப்பது எல்லாம் அந்த மனிதருக்கு சேரும் என்று எழுதியிருந்தார்கள். ஆனால் அடக்க ஆராதனைக்குப்பின், எல்லா கடன்களும் அடைக்கப்பட்ட பின்பு, அந்த மனிதருக்கு சேர்ந்தது, மிகவும் குறைவான தொகைதான். அந்த மனிதர் அந்த வேதாகமத்தை எடுத்து மேலே ஒரு இடத்தில் வைத்து விட்டு, பின் மறந்து போனார்.
.
முப்பது வருடங்கள் கழித்து, தன் மகனோடு தங்குவதற்காக மேலே இருந்த பொருட்களை எடுத்தபோது, அவர் கண்களில் வேதாகமம் தட்டுப்பட்டது. அதை அப்போதுதான் அவர் திறந்து பார்க்க ஆரம்பித்தார். அதில் அடுக்கடுக்காய் டாலர் நோட்டுகள் ஆயிரக்கணக்காக ஒவ்வொரு பக்கத்திலும் வைக்கப்பட்டிருந்தது. வேதத்தை பிரித்து படிப்பவர்க்கே அந்த பணம் என்று அந்த மூதாட்டி வைத்து போயிருந்தார்கள். அதை அறியாதவராக, ஒரு ஏழையாய், தன்னை வெறுமையாய் விட்டு சென்றதாக அந்த மூதாட்டியின் மேல் கோபம் கொண்டவராக, முப்பது வருடங்களை கழித்திருக்கிறார்.
.
நம் தேவனும் வேதத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நமக்கு ஆசீர்வாதங்களை எழுதி கொடுத்திருக்கிறார். ஆனால் நாமோ அதை வாசிப்பதில்லை, அதில் எழுதப்பட்டிருக்கிற காரியங்கள் யாருக்கோ என்று அந்நிய காரியமாக நினைக்கிறோம். 'என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்'(ஓசியா 8:12) என்று தேவன் சொல்வதை போல வேதத்தில் எழுதப்பட்டிருக்கிற காரியங்கள் யாருக்கோ எழுதப்பட்டிருக்கிறது என்று அதை வாசிக்காமல் விட்டு விடுகிறோம்.
.
வேதத்திலுள்ள மகத்துவங்களை காண என் கண்களை திறந்தருளும் என்று சங்கீதக்காரனை போல ஜெபித்து விட்டு, வாசிப்போமானால், தேவன் நமக்கு எழுதியிருக்கிற காரியங்கள், நமக்கு சொல்லும் எச்சரிப்புக்கள், நம்மை அன்போடு விசாரிக்கும் காரியங்கள், நமக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்கள் அத்தனையும் நாம் காண முடியும்.
.
அந்த மூதாட்டி எப்படி வேதத்தில் டாலர் நோட்டுக்களை வைத்திருந்தார்களோ, அதுப்போல தேவனும் ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார். ஆனால் அதை பிரித்து படித்து, அதை சுதந்திரமாக எடுத்து கொள்ள வேண்டியது நமது கடமை. அதை பிரிக்காமல், போதகர்கள் படித்து நமக்கு சொல்வார்கள், அதை நாம் கேட்டால் போதும் என்று நினைத்தோமானால், நாம் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க முடியாமற் போய் விடும்.
.
நாம் வேதத்தை வாசிக்காமல் இருப்பதனால்தான், வேத புரட்டர்கள் வேத வார்த்தையை புரட்டும்போது, அதை நிதானித்து அறியாமல் இருக்கிறோம். யாரும் சொல்வதை அப்படியே ஏற்று கொள்கிறோம். அது சரியானதொன்று அல்ல. வேதத்தை வாசிக்கும்போது ஆவியானவர் வெளிப்படுத்துவார், இதுதான் சரி, அது சரியல்ல என்று. அப்படிப்பட்ட மனநிலையோடு வாசிப்போமானால், கர்த்தரின் வார்த்தைகளை கொண்டு யாரும் நம்மை ஏமாற்ற முடியாது.
.
'நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு,.. அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்' என்ற வார்த்தையின்படி, வேதத்தில் கர்த்தர் எழுதி கொடுத்திருக்கிற காரியங்களை வெள்ளியை போல நாடுவோம், புதையல்களை தேடுவது போல தேடுவோம். அப்பொழுது ஆசீர்வாதங்களையும், தேவனை அறியும் அறிவையும் நிச்சயமாய் கண்டடைவோம். ஆமென் அல்லேலூயா!



வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
நன்கு புரியும்படி
தேவனே எனது கண்களையே
தினமும் திறந்தருளும்
ஆண்டவரே உம்பாதம் சரணடைந்தேன்
அடிமை நான் ஐயா

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment