Wednesday, February 8, 2012

கணக்கொப்புவிக்க வேண்டும்


ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான். - (ரோமர் 14:12).

ஒரு தேவ மனிதர் இரயிலை பிடிப்பதற்காக வேகமாக இரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். நுழைவாயிலில் இரு மனிதர்க்ள சரியான உடையின்றி, எலும்பும், தோலுமாக உடலில் உயிரே இல்லையோ என சந்தேகிக்கும் அளவுக்கு பரிதாபமாக படுத்திருந்தனர். ஒரு நிமிடம் நின்று அவர்களுக்காக ஜெபித்து விட்டு கடந்து சென்றார். இரயிலில் அமர்ந்தவுடன் தனது உடலை பார்த்தார். உடையை பார்த்தார். கண்ணீர் நிறைந்த கண்களோடு, 'இயேசுவே ஏன் அவர்களை மட்டும் இவ்வாறு வைத்திருக்கிறீர்?' என்று மனதிற்குள் கேட்டார். சிறிது நேரத்தில் அவருடைய இருதயத்தில் இவ்வாறு உணர்த்தப்பட்டார். 'அவர்களை விட உனக்கு அதிகம் கொடுத்துள்ளேன். ஆகவே அவர்களை விட உன்னிடம் அதிகம் எதிர்ப்பார்க்கிறேன்' என்பதாக. அவர் இரயில் பயணத்தில் இன்னும் தன்னை கர்த்தருக்கு அர்ப்பணித்தார்.
.
ஆம், ஐந்து தாலந்து கொடுத்தவனிடம் தேவன் பத்து தாலந்தை எதிர்ப்பார்த்தார். தேவன் நமக்கு கொடுக்கும் அனைத்தையும் நம் சுய இலாபத்திற்கும், சுய கௌரவத்திற்காகவும், பெருமைக்காகவுமே பயன்படுத்துவோமானால் இவ்வுலகில் மிகவும் வறுமையில் வாடுபவர்களை விட பரிதபிக்கப்பட்டவர்கள் நாமே. தேவன் நமக்கு கொடுத்துள்ள பெரிய வேலையை குறித்தோ, பணத்தை குறித்தோ, நல்ல உடல் ஆரோக்கியத்தை குறித்தோ கணக்கொப்புவி என்று கேட்பாரானால் நமது நிலை எப்படி இருக்கும் என சிந்திப்போமா?

.
தேவன் உங்களுக்கு கொடுத்த அதிகமதிகமான பணத்தை கொண்டு லேட்டஸ்ட் மாடல் கார்களை வாங்கி கொண்டு இருக்கிறோமா? வீட்டில் ஒவ்வொரு பகுதியையும் இடித்து புது மாடலில் கட்டுகிறோமா? அல்லது தேவனுடைய ஊழியத்திற்கு, ஏழை எளியவர்களுக்கு கொடுக்கிறோமா? இப்பொழுதெல்லாம் பெரும் பணக்காரர்கள் தங்கள் புகழ்ச்சிக்காகவே காணிக்கைகளையும், உதவிகளையும் செய்கின்றனர். அப்படிப்பட்ட சிந்தையாயிராதபடி எச்சரிக்கையாயிருப்போம்.

.
தற்போதுள்ள உலகில் மாதம் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் சம்பளம் வாங்குவதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. இவ்வளவு பெரிய தொகை நமது திறமைக்கும், படிப்பிற்கும் கிடைத்த பரிசு மட்டுமல்ல, தேவன் நம்மிடம் அதிகமாக எதிர்ப்பார்ப்பதினால் கிடைக்கும் அதிக தொகை என்பதை மறந்து போகாதிருப்போம்.

.

.
யோசேப்பிற்கு இவ்வளவு பெரிய பதவி கிடைத்ததென்றால் தமது தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியை பஞ்சத்தில் இருந்து காக்கவே! எஸ்தருக்கு கொடுக்கப்பட்ட பெரிய பதவி, யூத ஜனங்களின் உயிரை காப்பாற்றவே! தானியேலுக்கு அரசியலில் உயர் பதவியை தேவன் கொடுத்ததற்கு காரணம் தம்மை பற்றி அறியாத ஜனங்கள் தானியேலின் வைராக்கியத்தின் மூலம் தேவனே கர்த்தர் என்று அறிந்து கொள்ளவே!

.
பிரியமானவர்களே, தேவன் நமக்கு கொடுத்திருக்கும் பதவியும், செல்வாக்கும் அவரை உயர்த்தவே! அதிகமாக நமக்கு தேவன் கொடுக்க கொடுக்க நாம் அவருக்கு திரும்பி அதிகமாக கொடுக்க வேண்டும் என்றே எதிர்ப்பார்க்கிறார். பணத்தில் மட்டுமல்ல, நம்முடைய சாட்சியில், நம்முடைய வார்த்தைகளில், நம்முடைய செயல்களில் அவரை வெளிப்படுத்தவே எதிர்ப்பார்க்கிறார். அரசாங்கத்தில் இருப்பவர்கள் லஞ்சம் ஊழலுக்கு சாயாத சாட்சியுள்ள கிறிஸ்தவ வாழ்வை எதிர்ப்பார்க்கிறார். அப்படிப்பட்டதான வாழ்வை வாழ்ந்து அவருக்கு பிரியமாக இருப்போம். கர்த்தர் அதை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!

. 
பண்படுத்தும் உம் சித்தம் போல
பயன்படுத்தும் உம் விருப்பம் போல
உம் கரத்தில் நான் புல்லாங்குழல்
ஒவ்வொரு நாளும் இசைத்திடுமே
உமக்காக தானே ஐயா - நான்
உயிர் வாழ்கின்றேன் ஐயா

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment