Thursday, October 27, 2011

அருமையான குடும்பம் ஒரு அழகிய தோட்டம்

தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். - (எபேசியர் 5:28ன் பின்பகுதி)

நீங்கள் ஒரு நாள் இரண்டு வீடுகளுக்கு போகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். ஒரு வீட்டில் உள்ள தோட்டம் அருமையானதாய் இருக்கிறது. அடுத்த வீட்டு தோட்டத்திலே எங்கு பார்த்தாலும் களைகளும், முட்செடிகளும், காய்ந்த புல்லுகளுமாயிருந்தது. இரண்டும் பக்கத்து பக்கத்து வீடுகள்தான். என்ன வித்தியாசம் பாருங்கள்! தேவன் பட்சபாதமுள்ளவராயிருந்து இவருக்கு அருமையான தோட்டத்தையும், அவருக்கு பிரயோஜனமற்ற தோட்டத்தையும் கொடுத்து விட்டாரோ? இல்லை. முதல் வீட்டிலுள்ள கணவனும், மனைவியும் அருமையான ஒரு தோட்டத்தை உருவாக்க அநேக மணி நேரங்கள் பிரயாசப்பட்டிருக்கிறார்கள். இந்த இரு தோட்டங்களும், இரு வேறு திருமண வாழ்வை சித்தரிக்கிற படம் போன்றது. ஒரு திருமணம் அருமையான ஒரு தோட்டம் போல் இருக்கிறது. அங்கேயும் அநேக களைகள் இருந்தன. ஆனால் அதையெல்லாம் அவர்கள் அன்றன்றே பிடுங்கி விட்டார்கள். ஒவ்வொரு முறையும் களைகள் முளைக்கும்போதே அவை பிடுங்கப்பட்டு விட்டன.
.
அதன் பொருள் என்னவென்றால், இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்ட தீவிரமாயிருந்தனர். பிரச்சனையை வளர விடவில்லை. அன்றைக்கே அப்பொழுதே மன்னிப்பு கேட்டு, அதை மறந்து அடுத்த காரியத்தை குறித்து பேச ஆரம்பித்து விட்டனர். ஆகவே தான் அவர்கள் திருமண வாழ்வாகிய தோட்டம் அருமையாக காணப்பட்டது.
.
தேவன் ஒவ்வொருவருக்கும் அருமையான தோட்டத்தை போன்று திருமண வாழ்க்கையை தருகிறார். அதை அழகாக ஒரு நல்ல கனி தரும் தோட்டமாக மாற்றுவது நமது கையில் தான் இருக்கிறது. அதற்காக நேரம் எடுத்து, தண்ணீர் பாய்ச்சி, எரு இட்டு, களைகளை பிடுங்கி வேலி அடைத்து காத்து கொள்ளும்போது, அந்த தோட்டம் நல்ல கனிதரும் மரங்களையும், செடிகளையும் கொடுத்து அருமையான தோட்டமாக மாறுகிறது. அதுபோல குடும்பத்திற்காக நேரம் எடுத்து, மனைவி பிள்ளைகளுக்காக நேரம் கொடுத்து, அவர்களின் தேவைகளை சந்தித்து, தேவையானவற்றை வாங்கி கொடுத்து, குடும்பமாக தேவ சமுகத்தில் காத்திருந்து ஜெபித்து, பிள்ளைகளுக்கு வேதத்தை குறித்து போதித்து, கர்த்தருடைய வழியில் நடத்தும்போது, அந்த குடும்பம் ஒரு அழகிய தோட்டமாக உருவாகிறது.
.
அதே சமயத்தில் களைகளை வளரவிட்டு, தண்ணீர் கூட பாய்ச்சாமல் இருந்தால் அந்த தோட்டத்தின் செடிகள் வளரவது எப்படி? ஒரு அன்பான வார்த்தைக்கூட பேசாமல் ஒரு கணவன் இருந்தால் அவனை நம்பி வந்த மனைவிக்கு எப்படி இருக்கும்? எப்போது பார்த்தாலும் கோபம், கோபம், எதற்கெடுத்தாலும் கையை ஓங்குதல் போன்றவை இருந்தால் அந்த குடும்பம் எப்படி அழகான தோட்டமாக இருக்க முடியும்? கிறிஸ்தவர்களாக இருந்தாலும் மனைவியை அடிக்கிற கணவர்கள் எத்தனை பேர்? உண்மையிலேயே வேதனையான விஷயம்! வீட்டிலே சாட்சியை காத்து கொள்ளாமல் வெளியே போய் சாட்சி சொன்னால் அது யாருக்கும் பிரயோஜனமாயிருக்காது.
.
குடும்ப வாழ்க்கையிலே எப்போது வேண்டுமானாலும் சமாதானத்தை குலைக்கும் காரியங்கள் ஏற்படலாம். பிரச்சனை, கசப்பு, கோபம் வரலாம். ஆனால் அவற்றை உடனே களைந்து, மன்னிப்பு கேட்க வேண்டி இருந்தால் கேட்டு, உடனுக்குடன் சரி செய்து விடும்போது, அது மீண்டும் சந்தோஷத்தை கொடுக்கும் வீடாக மாறுகிறது.
.
தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான் என்று வேதம் கூறுகிறது. நாம் நம்மில் அன்புகூருவதால்தானே, வேளாவேளைக்கு சாப்பிடுகிறோம், நம் உடல் நலத்தில் கவனம் செலுத்துகிறோம். அதை போலவே நாம் நம் மனைவியின் மீது அன்புகூர வேண்டும். திருமணத்திற்கு பின் கணவனும் மனைவியும் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். கணவன் வேறு, மனைவி வேறு என்று இல்லை. ஆகவே ஒருவருக்கொருவர் செய்யும் தவறுகளை விட்டு கொடுத்து, மன்னித்து வாழும்போது, அந்த குடும்பம் ஒரு அழகிய தோட்டமாக மாறி விடுகிறது.
.
பிரியமானவர்களே, நாம் ஒருவரையொருவர் மன்னித்து விடாதிருக்கும் பட்சத்தில், களைகள் வளர்ந்து, முடசெடிகள் செழித்து, வளர்ந்து தோட்டத்தையே பாழாக்கி விடும். ஆகவே சூரியன் அஸ்தமிக்கும் முன்பாக நம் கோபம் மறையட்டும். மறுநாள் மறுநாள் என்று பிரச்சனையை இழுத்து கொண்டே போவாமானால், பிரச்சனைக்கு முடிவே வராது. வளரும் களைகளை அன்றே பிடுங்குவோம், பிரச்சனைக்கு உடனே முடிவு கட்டுவோம். தேவன் தாமே அதற்கு உதவி செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
.
நல்ல குடும்பம் நீர் தந்தீரையா
செல்ல பிள்ளைகள் தந்தீரையா
அணைக்கும் கணவரை தந்தீரையா
அன்பு மனைவியை தந்தீரையா
..
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment