Wednesday, November 16, 2011

பாவத்தின் வேரை பிடுங்குவோம்


..யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,.. எச்சரிக்கையாயிருங்கள். - (எபிரேயர் 12:16).

ஒரு மனிதர் ஒரு குதிரையை பாசமாக வளர்த்து வந்தார். அந்த குதிரை தன் எஜமான் சொல்வதை கேட்டு அவருக்கு உதவியாக இருந்து வந்தது. ஒரு நாள் அது பின்னால் இருந்த வேலியை எட்டி உதைத்ததினால் அதன் கால்களில் புண் உண்டானது. அதை கண்ட அந்த மனிதர் அதற்கு மருந்து போட்டு, காயத்தை கட்டி விட்டார். ஆனால் அந்த குதிரையால் சரியாக நடக்க முடியவில்லை. ஆகையால் ஒரு மிருக மருத்துவரிடம் போய் அந்த குதிரையை காட்டினார். அவர் அந்த குதிரையை பரிசோதித்து விட்டு, அதற்கு புண் ஆறுவதற்கான மருந்தை கொடுத்தார். அதை சாப்பிடும் நேரத்தில் அந்த குதிரை நன்றாக நடந்தது. ஆனால் மருந்தை நிறுத்தினால், பின் திரும்பவும் நடக்க முடியாமல் போனது. அந்த மனிதர் திரும்பவும் அந்த மருந்தை கொடுத்தார். அதை சாப்பிட்ட குதிரை நடந்தது, பின் திரும்ப பழையபடி நொண்டி நொண்டி நடக்க ஆரம்பித்தது.

.
அந்த மனிதர் அந்த குதிரையை நேசித்ததால் மீண்டும் அதை மருத்துவரிடம் கொண்டு போய் காண்பித்தார். அந்த வைத்தியர் மயக்கமருந்து கொடுத்து அந்த காலை சரியாக பரிசோதித்து பார்த்தபோது, அந்த காலுக்குள், ஒரு இரும்பு கம்பி உள்ளே இருப்பதை கண்டார். அந்த குதிரை ஆண்டிபயாடிக் (Antibiotic)என்னும் கிருமி தடுப்பு மருந்தை சாப்பிடும் நேரம் சுகமாக இருந்தது. பின் அது மீண்டும் பழைய நிலைப்படி நொண்டி நொண்டி நடந்தது. அந்த இரும்பு கம்பியை எடுத்து, சரியான மருந்து இட்டபோது, அந்த குதிரை குணமாகி, நன்கு நடக்க ஆரம்பித்தது.
.
நம்முடைய இருதயத்திற்குள்ளும் பாவத்தின் வேர் உள்ளே ஆழமாக பதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. நாம் கர்த்தருடைய வசனத்தை கேட்கும்போது, பாவத்திலிருந்து நாம் அறிக்கையிட்டு, மன்னிப்பை பெற்று விட்டோம் என்று நினைத்து கொள்கிறோம். ஆனாலும் திரும்ப திரும்ப நாம் ஏன் பாவம் செய்து அதில் விழுந்து கொண்டிருக்கிறோம்?
.
நாம் கர்த்தரிடம் வந்து அவரிடம் மன்னிப்பை பெற்றது உண்மைதான். ஆனாலும் அடுத்த முறை வரும்போது, நாம் பரிசுத்தமுள்ளவர்களாய் இருப்பதில்லை, ஏதாவது பாவத்தில் விழுந்தவர்களாகவே காணப்படுகிறோம். ஏனெனில் பாவ சுபாவம் நமக்குள் வேர்விட்டு ஆழ பதிந்திருப்பதால் தான். ஆகையால் தான் நம்முடைய சில கூடபிறந்த சுபாவங்கள் நாம் மறுபடியும் பிறந்தாலும் நம்மை விட்டு மாறிப்போவதில்லை.
.
அப்போஸ்தலனாகிய பவுலும் 'என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மைவாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்' (ரோமர் 7:18-19) என்று சொல்கிறார். நாம் செய்யக்கூடாது என்று நினைத்தாலும் நம் மாம்சம் செய்யும்படி தூண்டுகிறதாகவே இருக்கிறது.
.
அதிலிருந்து நாம் எப்படி வெளிவருவது? பழைய மனிதனுக்கு மரித்து, கிறிஸ்துவுக்குள் வளருவதே. 'கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்'(ரோமர் 8:10). கர்த்தருடைய வருகையிலே நாம் மறுரூபமாக்கப்படும்போது, நமது பாவ சுபாவமும், பாவ சரீரமும் அழிந்து போகும். நாம் முற்றிலும் மறுரூபமாக்கப்படுவோம். அதுவரை நாம் பாவத்திற்கு விரோதமாக போராடி அதிலே வெற்றி காண்பவர்களாக காணப்பட வேண்டும்.
.
நமக்கு உதவியாக பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் துணையாக இருப்பதால் அவர் மூலமாக நாம் பாவத்தின் மேல் வெற்றி பெற்றவர்களாக வாழ முடியும். 'மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்' (1 கொரிந்தியர் 10:13) என்ற வசனத்தின்படி, தேவன் தாமே பாவத்திலிருந்தும், சோதனைகளிலிருந்தும் தப்பும்படியான போக்கை உண்டாக்கி நம்மை அதிலிருந்து வெளியேற்றுவார்.
.
நம் தேவன் பரிசுத்தராய் இருக்கிறது போல நாமும் பரிசுத்தமாய் வாழ்ந்து, 'அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்' (பிலிப்பியர் 2:12) என்ற வார்த்தையின்படி பரலோக ராஜ்யத்திற்கு பாத்திரவான்களாக பரிசுத்தமாய் வாழ பிரயாசப்படுவோம், தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் அந்த கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
.
பாவத்தின கறைகள் நீங்கட்டுமே
சாபத்தின் நுகங்கள் முறியட்டுமே
இயேசுவின் நாமத்தில் ஜெயம்மெடுத்தே
வெற்றியின் கீதங்கள் பாடிடுவேன்
..
அக்கினி ஜீவாலை ஆக்கும் தேவா
கொழுந்து விட்டெறிய ஊற்றும் தேவா
பாவம் நெருங்கா அக்கினியாய்
சாத்தானை ஜெயிக்க உதவும் தேவா

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment