Wednesday, November 16, 2011

பாவ சிந்தனைகள்

தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?  
நீதிமொழிகள். 6:27.
.
1991ம் வருடம் ஜூன் மாதம் 12ம் தேதி பிலிப்பபைன்ஸ் நாட்டின் சுதந்திர நாளில் பினாடுபோ (Pinatubo) என்னும் எரிமலை வெடித்தது. அது 500 வருடத்திற்கு மேலாக அமைதியாக சலனமில்லாமல் இருந்தது. அது இனி வெடிக்கப் போவதில்லை என்று மக்கள் அதை மறந்திருந்த நேரத்தில், அது வெடித்தது. அப்போது 8 மணி நேரத்திற்கு மேல் பூமி அதிர்ந்தது. அது 50,000 அடி உயரத்திற்க்கு சாம்பல் புகையை மேலே கிளப்பியது. மாத்திரமல்ல, Typhoon Yunga என்னும் சூறாவளிக் காற்றும் சேர்ந்து வீசியதால் சாம்பலும் புகையும் சேர்ந்து, கறுப்பு மழை பெய்தது. அதனால் அந்த சனிக்கிழமை கறுப்பு சனிக்கிழமை (Black Saturday) என்று அழைக்கப்பட்டது.
.
அந்த மலையிலிருந்து சில மைல் தூரத்தில் அமைந்திருந்த அமெரிக்க விமானப்படை அந்த இடத்தை முழுவதுமாக விட்டுவிட வேண்டி வந்தது. ஆயிரக்கணக்கான மக்களும் அமெரிக்க வீரர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்ற, தப்பித்து ஓட வேண்டி இருந்தது. அநேக நாட்கள் அந்த எரிமலை வெடிக்காததால் மக்கள் அதை சாதாரண மலையாக நினைத்து வாழ்ந்து வந்தார்கள்.
.
இந்த எரிமலை எத்தனையோ வருடங்கள் அமைதியாக இருந்து, ஒரு நாள் வெடித்ததுப் போல நம்முடைய பாவ குணங்களும் நமக்குள் மறைந்து இருந்து, வெளியே தலைக்காட்டாமல், அமைதியாக இருக்கின்றது. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். அது அமைதியாக இருப்பதால், அது அப்படியே இருந்துவிடும் என்று நாம் நினைத்தால் அது ஒரு வேளை தவறாகி விடலாம்.
.
இதைத்தான் சாலமோன் ஞானி தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ? என்றுக் கேட்கிறார். அதாவது, பாவமானது அமைதியான எரிமலையைப் போல நமக்குள் எத்தனையோ நாடகள் தூங்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அது ஒரு நாள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். அப்போது அதனுடைய விளைவு மிகவும் மோசமாக இருக்கும். நாம் ஒரு வேளை நினைத்துக் கொண்டிருக்கலாம், நான் பாவம் செய்வதிலிருந்து வெளிவந்து விட்டேன். இனிமேல் பாவம் செய்ய மாட்டேன், நான் பரிசுத்தமாகி விட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்; ஆனால் ஒரு நாள் எரிமலை வெடிப்பதைப் போன்று, நமக்குள் கனிந்துக் கொண்டிருக்கிற பாவம் அதற்கு தருணம் கிடைக்கும்போது, வெடிக்க தவறுவதில்லை.
.
இதிலிருந்து நாம் எப்படி தப்பித்துக் கொள்வது? நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் என்று சங்கீதக்காரன் சங்கீதம் 119:11 ல் கூறுகிறார். ஆம் அது தான் வழி. பாவ சிந்தனைகள் நம் இருதயத்தில் வரும்போது கர்த்தருடைய வார்த்தைகளை மனதில் கொண்டு வந்து, பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டும். ஒரு சில நிமிட இன்பத்திற்காக பாவத்தைச் செய்துவிட்டு வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வில் சிக்கித் தவிப்பதை விட பாவம் செய்யாதபடி நம்மை பாதுகாத்துக் கொள்வதே சிறந்தது. கர்த்தருடைய வார்த்தைகள் நம் இருதயத்தில் இருந்தால் பாவ நெருப்பு அல்ல, பரிசுத்த ஆவியானவரின் நெருப்பே நம் இருதயத்தில் கொழுந்து விட்டு எரியும். வார்த்தைகளை நம் இருதயத்தில் வைத்து வைப்போம், பாவம் செய்யாதபடி நம்மைக் காத்துக் கொள்வோம் இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார்.
.
சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்
பேரின்ப நாதா நீர் போதாதா?
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான ஆசை வேண்டாமையா
.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment