Monday, November 7, 2011

இரட்சகரின் மாற்றிவிடும் தொடுதல் - பாகம் - 2

இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். - (மாற்கு 1:41-41).

கடந்த தினத்திலே குஷ்டரோகியான ஒருவன்; கிறிஸ்துவின் முன்னால் வந்து முழங்காற்படியிட்டு, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டபோது, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அவனை கர்த்தர் தொட்டு சுகப்படுத்தியதை குறித்து பார்த்தோம். தொடர்ந்து இரட்சகர் அவனை தொட்டதால் அவனில் ஏற்பட்ட மாற்றத்தை குறித்து பார்ப்போம்.
.
'இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்'. அல்லேலூயா! நம் தேவனால் சுகமாக்க முடியாத வியாதி ஒன்றுமே இல்லை. அவர் தொடுதல் அத்தனை வல்லமையுள்ளது. இயேசுகிறிஸ்துவிடம் வந்த எவரும் ஒரு போதும் வந்த வண்ணமாகவே திரும்பி செல்ல முடியாது.
.
இயேசுகிறிஸ்து தொட்ட மாத்திரத்தில் அழுகி நாற்றம் எடுத்து கொண்டிருந்த அவனது தோலும் புண்களும் புது மாற்றத்தை பெற ஆரம்பித்தது. அவனது தோல் சிறு பிள்ளையின் தோல் போல ஒரு சேதமும் இல்லாமல் மாசற்றதாக மாறினது.
.
பிரியமானவர்களே, ஒரு வேளை நமக்கு தொழு நோய் இல்லை என்று சொல்லலாம், ஆனால் பாவம் ஒரு தொழுநோயை போல கர்த்தரிடமிருந்து நம்மை பிரித்து, அசுத்தமாக இருப்பதால், நான் கர்த்தரிடம் வருவதற்கு தகுதியில்லாதவன், அல்லது இல்லாதவள் என்று நம்மை நாமே கர்த்தரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? தம்மிடத்தில் வந்த ஒருவரையும் புறம்பே தள்ளாத நேசர் மனதுருக்கம் உள்ளவராய், எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு என்று நம் பாவ நோயை தொட்டு சுகப்படுத்துவார். அவர் தொடும்போது நாற்றம் எடுத்தது போன்ற நமது பாவ வாழ்க்கை புதியதாக மாறிவிடும். 'இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின' - (2கொரிந்தியர் 5:17) என்ற வசனத்தின்படி புது சிருஷ்டியாய் மாறிவிடுவோம். பழைய நாற்றமெடுத்த வாழ்க்கை மாறி, எல்லாமே புதிதாக மாறிவிடும். அல்லேலூயா!
.
கிறிஸ்துவால் மன்னிக்க முடியாத பாவம் எதுவுமே இல்லை. அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் வல்லமையுள்ளது. ஆமென். அவர் சுத்தமாக்கியதை யாராலும் அசுத்தம் என்று தள்ளிவிட முடியாது. பாவத்திலிருந்து விடுதலை தரும் ஒரே தெய்வம் இயேசுகிறிஸ்து மாத்திரமே! அவரிடத்தில் விசுவாசத்தோடு வந்து, 'ஐயா என்னை சுத்தப்படுத்தும்' என்று கேட்கும்போது, நிச்சயமாகவே தமது இரத்தத்தால் நம்மை கழுவி, நம்மை சுத்தப்படுத்தி, நித்திய ஜீவனை நமக்கு கொடுத்து, நம்மை பரலோக ராஜ்யத்திற்கு தகுதியாக்குவார். ஆமென் அல்லேலூயா!
.
'அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்'. அவர் ஏன் அவனை உடனே அனுப்பிவிட்டார் என்றால், இந்த அற்புதத்தை காணும் மக்கள், அவரை அற்புதம் செய்கிறவராகவே பார்ப்பார்களே ஒழிய இராஜ்யத்தின் சுவிசேஷத்தை கேட்கிறவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதே. அவர் எங்கு சென்றாலும் அவரை சுகமளிக்கிறவராக காண்பார்களே ஒழிய, அவர் இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தை உணர மாட்டார்கள். இந்த நாளின் சுவிசேஷகருக்கும் அவருக்கும் தான் எத்தனை வித்தியாசம்! இந்த நாட்களில் ஏதோ ஒரு அற்புதம் நடந்து விட்டால்தான் எத்தனை எத்தனை பிரசித்தப்படுத்துதல், விளம்பரங்கள்!! ஒவ்வொரு முறையும் அதை கூட்டத்தில் சொல்லி, தங்களை உயர்த்தி காண்பிக்கும் தன்மைகள்!!
.
அந்த மனிதனிடம் கர்த்தர் வெளியே சொல்ல வேண்டாம் என்றாலும் அவன் கேட்காமல், 'அவனோ புறப்பட்டுப் போய், இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்' என்று பார்க்கிறோம். ஆம், கர்த்தர் ஒருவனுடைய வாழ்வை தொடும்போதுதான் அது எத்தனை எத்தனை சந்தோஷத்தை அவன் வாழ்வில் கொண்டு வருகிறது! அவனால் சும்மா இருக்க முடியாது. என் தேவன் எனக்கு செய்த அற்புதத்தை பாருங்கள் என்று அவன் துள்ளி குதித்து, கர்த்தரை பிரசித்தம் செய்கிறவனாக மாறி விடுவான். முதலில் தீட்டு தீட்டு என்று கதறினவன், இப்போது நான் சுத்தமானேன், சுத்தமானேன் என்று சந்தோஷமாய் கூற தொடங்கி விடுவான். அல்லேலூயா!
.
இது போன்ற புதிதாக்கப்பட்ட, நம் வாழ்க்கையை மாற்றிவிடும் கிறிஸ்துவின் மனதுருக்கமான தொடுதலுக்கு நம்மை அர்ப்பணிப்போமா? அந்த குஷ்டரோகி எத்தனை அசுத்தமானவனாக இருந்திருந்தாலும் அவன் வாழ்க்கையில் ஒரு அற்புதமான புது மாற்றம் ஏற்பட்டது போல கர்த்தரிடம் வரும் ஒவ்வொரு பாவியின் வாழ்விலும், அது எப்பேற்பட்ட அசுத்தமாய் இருந்தாலும் கர்த்தர் தமது பரிசுத்த வல்லமையுள்ள இரத்தத்தால் கழுவி நம்மை சுத்திகரித்து, நம்மை புதியவர்களாக மாற்றி விடுகிறார். நம்மை அதற்கு அர்ப்பணிப்போமா? ஆமென் அல்லேலூயா!
.
தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மையே நான்
காண வேண்டுமே
..
தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மை போல்
என்னை மாற்றுமே

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment