நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து
நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய
சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். - எபேசியர் - 6:11.
.
நள்ளிரவு எங்கும் கும்மிருட்டு காற்றுக்கு
கிறுக்கு பிடித்ததுபோல அலைந்து திரிந்து கத்தியது. அந்த
வீட்டில் அவர் ஒருவரைத்தவிர வேறு யாருமில்லை. அந்த
ஊழியர் நிம்மதியான நித்திரையில் இருந்தார். திடீரென்று
சத்தம் கேட்டு விழித்த அவரின் முன்னே பயங்கரமும்
அருவருப்பும் கொண்ட கொடிய உருவம் நின்று கொண்டிருந்தது.
அவர் அதை நேருக்கு நேர் பார்த்து சே! நீதானா பிசாசே! நான்
கூட என்னவோ ஏதோவென்று நினைத்துவிட்டேன் என்று கூறி
விட்டு மறுபடியும் படுத்துக் கொண்டாராம். என்ன அவமானம்
பிசாசிற்கு! என்னவொரு விசுவாசம் அவருக்கு..!
.
இதுபோலத்தான் பிசாசனவன் தன் கொடூரமான முகத்தை
பிரச்சனைகள் கவலைகள் போன்றவற்றின் மூலமாகக் காட்டி
நம்மை பயமுறுத்துகிறான். உடனே நாம் தேவன்
நம்மோடிருப்பதை மறந்து பயந்து நடுங்கிவிடுகிறோம். ஆனால்
நாம் செய்யவேண்டியதென்ன? முதலில் எல்லாவற்றிற்காகவும்
தேவனை மகிமைப்படுத்த வேண்டும். தேவன் என்னை
இப்பிரச்சனையிலிருந்து மீட்க வல்லவர் என்பதை
விசுவாசித்து நம்பிக்கையோடு இருக்க வேண்டும். அப்போது
சாத்தான் வெட்கப்பட்டு போவான்.
.
ஜெபிக்கிறவன் மட்டுமே பிசாசிற்கு எதிர்த்து
நிற்ப்பான். ஆம் ஜெபம் என்னும் மூலப்பொருள்
உங்களுக்குள் இருக்கும் போது உள்ளான மனிதன் சூரியனைப்
போன்ற வல்லமையுடையவனாய் மாறுவான். சாத்தானின் ஆற்றல் ஒரு
டம்ளர் தண்ணீர் போன்றதுதான். அதைக் கொண்டு ஒரு
மெழுகுவர்த்தியை அணைக்கலாம். ஆனால் சூரியனின் வெப்பத்தை
ஒரு டம்ளர் தண்ணீரினால் அணைக்க முடியுமா? முடியவே
முடியாது. அதுபோலத்தான் கிறிஸ்துவில் உறுதியாய்
அடித்தளம் போட்டிருக்கும் உங்களை சாத்தான் கொண்டு வரும்
பிரச்சனைகள் அழிக்க முடியாது. ஆகவே உங்களது அந்தரங்க
ஜெபவாழ்வு சூரிய வெப்பத்தைப் போல் சக்தி வாய்ந்ததாய்
இருக்க வேண்டும்.
.
தேவப்
பிள்ளையே! உனது ஜெப வாழ்க்கை சூரியனா?
மெழுகுவர்த்தியா?
.
ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெப வீரனே
துதிக்க தூண்டும் துணையாளரே
சாத்தானின் சகல தந்திரங்களை
தகர்த்தெறிய வாருமையா
0 comments:
Post a Comment