Sunday, November 27, 2011

எதை தெரிந்தெடுப்பீர்கள்?

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். - யோவான் 10:10.

ஒரு பணக்கார வாலிபன், மரித்து, பரலோக வாசலண்டை போனபோது, அங்கு பரிசுத்த பேதுரு நின்று அந்த வாலிபனிடம், ‘நாங்கள் இங்கு ஒரு புதிய தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். பரலோகத்திற்கு செல்வதா அல்லது நரகம் செல்வதா என்று நீங்களே தீர்மானிக்கலாம்’ என்றார். அப்போது அந்த வாலிபன், 'ஓ! இவ்வளவுதானே, நான் பரலோகத்திற்கு செல்லவே விரும்புகிறேன்' என்றுக் கூறினான். அப்போது பேதுரு, அப்படி தீர்மானிப்பது அவ்வளவு எளிதல்ல, அதற்கு முன்பு நரகத்தில் ஒரு நாளும், பரலோகத்தில் ஒரு நாளும் செலவழிக்க வேண்டும். அதன்பின், நீ முடிவெடுக்கலாம் என்றுக் கூறினார்.
.
முதலில், அவன் நரகத்திற்கு அனுப்பப்பட்டான். அங்கு போனவுடன், அருமையான ஒரு தோடடம் இருந்தது. அங்கு அவனுடைய பழைய நண்பர்களும், அவனோடு கூட வேலை செய்தவர்களும், அவனை வரவேற்று, பழைய கதைகளைப் பேசி, சந்தோஷமாய் நேரத்தைக் கழித்தார்கள். சாத்தானையும் அவன் சந்தித்தான். சாத்தானும் நல்ல மனிதனாகவே காணப்பட்டான். இரவில் நல்ல சாப்பாடு பரிமாறப்பட்டது. நேரம்போனதே தெரியாமல், அந்த நாள் முடிவடைந்தது. அடுத்த நாள் அவன் பரலோகத்திற்கு சென்றான். அங்கும், நாள் நன்றாகவே இருந்தது. மேகங்களில் மேல், பறந்தும், பாட்டுகளைப் பாடியும் அந்த நாள் முடிவடைந்தது.
.
அடுத்த நாள், பேதுரு வந்து அவனிடம், 'நீ என்ன முடிவெடுத்திருக்கிறாய்?' என்றுக் கேட்டபோது, அந்த வாலிபன், ''பரலோகம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நரகத்தில் நான் என் நேரத்தை நன்கு செலவழித்தேன். ஆகவே நான் நரகத்திற்குச் செல்லவே விரும்புகிறேன்’’ என்றுக் கூறினான். அப்படிச் சொன்னவுடன் அவன் நரகத்திற்கு உடனே அனுப்பப்பட்டான். அங்கு போனவுடன், முந்திய நாள் பார்த்ததைப்போல எந்த தோட்டமும் இல்லை. அழுக்கும் பூச்சிகளும், அருவருப்பான துர்நாற்றமும் வீசியது. அவனுடைய நண்பர்கள் கிழிந்த அழுக்கு உடைகளை அணிந்து, அசுத்தமாய் இருந்தனர். அவர்களை குட்டிப் பிசாசுகள் துரத்தி வேலை வாங்கிக் கொண்டிருந்தன. அப்போது அவன் அங்கு வந்த சாத்தானிடம்,'' ''எனக்கு ஒன்றும் புரியவில்லை, நேற்று நான் வந்தபோது என் நேரம்போனதே தெரியாமல், சந்தோஷமாய் கழித்தேன், நல்ல சாப்பாடு கொடுக்கப்பட்டது. ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழாக இருக்கிறதே'' என்றுக் கேட்டதற்கு சாத்தான், வஞ்சக சிரிப்புடன், 'நேற்று உன்னை நாங்கள் இங்கு வருவதற்கு தெரிந்தெடுத்தோம். இன்று நீ எங்களில் ஒருவன்' என்று அலட்சியமாக சொல்லிவிட்டு, சாட்டையினால் அடித்து, வேலை செய்யும்படி விரட்டினான்.
.
இந்தக் கதை கற்பனையாக இருந்தாலும் சாத்தான் மக்களை தன் பக்கம் இழுப்பதற்காக பாவத்தையும் உலகத்தின் கவர்ச்சிகளையும் மிகவும், அழகாக காட்டி, இதுவே நல்லது என்று ஆத்துமாக்கள் நினைக்கும்படியாக அவர்களை மயக்கி தன் பக்கம் இழுக்கிறான். ஆனால், அவர்கள் உண்மையான சாமாதானத்தையும், சந்தோஷத்தையும் இயேசு கிறிஸ்துவின் தனிப்பட்ட உறவின் மூலமும், அவருடைய இரத்ததத்தினால் கழுவப்பட்டாலொழிய கிடைக்காது என்பதையும் மறைத்து பாவத்தை மிகவும் அருமையாக கவர்ச்சிகரமாக காட்டுகிறான். அவனுடைய தந்திரத்தில் சிக்கிக் கொண்ட ஒருவரும் வெளியே வருவது மிகவும் கடினம். சிக்கிக் கொள்ளாதபடி நாம் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். சாத்தான் தனக்கு கொஞ்ச காலம்தான் உண்டென்று அறிந்து, தன்னால் இயன்ற வரை ஆத்துமாக்களை தன் பக்கம் ஈர்ப்பதற்காக உலக சந்தோஷங்ளை காட்டி, அதுதான் வாழ்க்கை என்பதைப் போல் அவர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறான். கிறிஸ்துவுக்கு விரோதமாக வாழ்வதும், பாவங்களை செய்வதிலுமே சந்தோஷம் இருப்பதைப் போல் அவன், செய்கிற காரியங்களில் ஆத்துமாக்கலும் இழுப்புண்டு பாவத்தை தண்ணீரைப போல குடிக்கிறார்கள்.
.
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள் (நீதிமொழிகள். 16:25) என்று வேதம் திட்டவட்டமாகக் கூறுகிறது. நம்முடைய வழிகள் அல்ல, நம்முடைய ஞானம் அல்ல, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசமும், அவரே தேவனென்று அறிக்கையிட்டு, அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வதுமே நம்மை பரலோகம் சேர்க்கும். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்று அப்போஸ்தலர் 4:12ல் வேதம் நமக்கு தெளிவாக கூறுகிறது. ஆகவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு நம்முடைய பாவத்தை அறிக்கையிட்டு, அவரிடம் மன்னிப்பு கேட்போம். இரட்சிப்பை இலவசமாக பெற்றுக் கொள்வோம். அவருக்கென்று வாழ்வோம். சாத்தானின் தந்திரங்களை முறியடிப்போம். அவன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். ஆனால் கிறிஸ்துவோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தார். அவரை நம்புவோம். அவருக்குள் வாழ்வோம் பாலோக ராஜ்ஜியத்தை சுதந்தரிப்போம். ஆமென் அல்லேலூயா!
.
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கறை நீங்க இருதயத்தை

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment