Thursday, November 10, 2011

கர்த்தரின் பந்தியில் வா

பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். - (லூக்கா 22:19).

ஒரு தகப்பனுக்கு ஒரே ஒரு பிள்ளை இருந்தான். அவர்கள் ஒரு மலைபாங்கான இடத்தில் வாழ்ந்து வந்தார்கள். அந்த இடத்தில் காரோ, லாரியோ, வேறு எந்த பெரிய வாகனங்களோ வருவது கிடையாது. அந்த பிள்ளை வளர்ந்து வரும்போது தனக்கு ஒரு சைக்கிள் வேண்டும் என்று தகப்பனிடம் கேட்டான். அவரும் அவனது ஆசைக்கிணங்க வாங்கி கொடுத்து, எப்படி ஓட்ட வேண்டும் என்று கற்று கொடுத்தார்.
.
ஒரு நாள் அந்த மகன் அந்த சைக்கிளை எடுத்து ஓட்டி கொண்டு இருந்த போது, அந்த வழியாக வழி தெரியாமல் வந்த ஒரு காரில் அடிபட்டு, அந்த இடத்திலேயே அவன் மரித்து போனான். அந்த தந்தை அடைந்த துக்கத்திற்கு அளவே இல்லை. வாய் விட்டு ஓவென்று அழுதார். தான் வாங்கி கொடுத்த சைக்கிளே அவனுக்கு முடிவை கொண்டு வந்து விட்டதே என்று கதறினார். அவனை அடக்கம் செய்து விட்டு, நொறுங்கி போயிருந்த அந்த சைக்கிளை கொண்டு வந்து, தன் வீட்டில் மேல் ஒரு இடத்தில் போட்டு வைத்தார். வருடங்களாகியும், அவர் அந்த சைக்கிளை பார்க்கும்போது அவர் கண்களில் கண்ணீர் பெருகும். கடந்த நிகழ்ச்சிகளை நினைத்து பார்ப்பார்.
.
பிரியமானவர்களே, கர்த்தருடைய பந்தியில் நாம் எப்படி கலந்து கொள்கிறோம்? ஏதோ கடமைக்காக, அதை எடுக்காவிட்டால், ஆலய உறுப்பினரிலிருந்து நீக்கி விடுவார்கள் என்று அதற்காக பந்தியில் பங்கு பெறுகிறவர்களும் உண்டு. பாவம் செய்து விட்டு, துணிகரமாக வந்து பந்தியில் கைபோடுபவர்களும் உண்டு. பந்தியில் பங்கு பெற்றால் என் பாவம் நீங்கி போகும் என்ற எண்ணத்தோடு பங்கு பெறுகிறவர்களும் உண்டு, என் நோய் தீர்ந்து போகும் என்று பங்கு பெறுகிறவர்களும் உண்டு. இப்படி எத்தனையோ காரணங்களுக்காக கர்த்தருடைய பந்தியில் பங்கு பெற்றாலும் கர்த்தர் அதை எடுக்க சொன்னதற்கான காரணம் ஒன்று உண்டு.
.
பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆம் அவரை நினைவுகூரும்படியாகத்தான் நாம் கர்த்தருடைய பந்தியில் பங்கு பெற வேண்டும். அவர் நமக்காக பட்ட பாடுகளை நினைத்தபடியே, நீர் எனக்காக உமது சரீரத்தில் பாடுகளை பட்டீரே என்று நினைத்தபடியே, இந்த அப்பம் எனக்காக பிட்க்கப்பட்ட இயேசுகிறிஸ்துவின் சரீரம் என்று உணர்ந்தவர்களாக அப்பத்தையும், எனக்காக என் இயேசுகிறிஸ்து சிந்தின இரத்தம் என்று திராட்சரத்தையும் நினைவு கூர்ந்தவர்களாக எடுக்க வேண்டும்.
.
எப்படி மேலே குறிப்பிட்ட உதாரணத்தின்படி அந்த தகப்பன் அந்த சைக்கிளை பார்க்கும்போதெல்லாம் தன் மகனை நினைவுகூர்ந்தாரோ, அதே போல கர்த்தருடைய பந்தியை பார்க்கும்போதெல்லாம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே நம் ஞாபகத்திற்கு வந்து, அவர் நமக்காக பட்டபாடுகளும், வேதனைகளும் நினைவுகூர்ந்தவர்களாக நாம் அந்த பரிசுத்த பந்தியில் பங்கு பெற வேண்டும்.
.
சில வேளைகளில் நாம் அந்த பரிசுத்த பந்தியில் அபாத்திரமாய் பங்கு பெற முடியும். 'என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்' (1 கொரிந்தியர் 11:29-30) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. எப்படி நாம் அபாத்திரமாக பங்கு பெற முடியும்?
.
பிரிவினைகள் (வசனம் 1கொரிந்தியர் 11:18)
சகோதரர்க்குள்ளே பிரிவினையாய் இருந்து கொண்டு, ஒருவரோடொருவர் வாக்குவாதம் செய்து சண்டையிட்டு கொண்டு கர்த்தருடைய பந்தியில் பங்கு பெற கூடாது.
மார்க்கபேதங்கள் (வசனம் 19)
சுயநலம், வெறிகள் (வசனம் 20) மற்றவர்களை குறித்து அக்கறை இல்லாதவர்களாக, மற்றவர்களை அசட்டை செய்துவிட்டு, சிகரெட் குடித்து விட்டு வந்து எடுக்க கூடாது. எடுத்து விட்டு போய் சிகரெட் குடிக்கவும் கூடாது. அசுத்தமான காரியங்களை துணிகரமாய் செய்துவிட்டு வந்து பரிசுத்த பந்தியில் பங்கு பெற கூடாது.
குடிவெறிகள் (வசனம் 21)
ஏழைகளை புறக்கணித்தல் (வசனம் 21)
தேவ சபையை அசட்டை செய்தல் (வசனம் 22)
யார் இந்த போதகர் தானே என்று போதகரையும், இந்த சபையில் போய் யார் எடுப்பது என்று அசட்டை செய்வதும் கூடாது.
கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாதிருத்தல் (வசனம் 29).
இது எனக்காக பிட்கப்பட்ட கர்த்தருடைய சரீரம் என்று நினைக்காமல் பங்கு பெறுவது போன்ற இந்த காரியங்கள் நிச்சயமாக நமக்கு ஆக்கினை தீர்ப்பை கொடுக்கும்.
.
ஆகவே பரிசுத்த பந்தியில் பங்கு பெறுவதற்கு முன் நாம் நம்மை ஆராய்ந்து, நம்மை ஒரு விசை கூட தாழ்த்தி, கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டு, பிறகு பந்தியில் பங்கு பெற வேண்டும். மற்ற சக விசுவாசிகளோடு, நல்ல உறவு முறையில் இல்லை என்றால் முதலில் ஒப்புரவாகிவிட்டு, பின் வந்து பங்கு பெற வேண்டும். 'இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்' (வசனம் 30) நாம் வியாதியாய் போவதற்கு நம்மை ஆராயாமல் கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறுவதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. 'நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்'(வசனம் 31)
.
மிகவும் விலையேறப்பெற்ற பரிசுத்தமான கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறுகிற ஒவ்வொருவரும் நம்மை நாமே நிதானித்து அறிந்து பாத்திரவான்களாக பங்கு பெற வேண்டும். 'என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்' (யோவான் 6:54) என்ற கர்த்தருடைய வார்த்தையின்படி அவர் நம்மை கடைசி நாளில் எழுப்பி அவரோடு கூட என்றென்றும் இருக்கும்படியான கிருபையை தருவாராக! ஆமென் அல்லேலூயா!
.
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
..
சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்க்காய் வேண்டினீரோ
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் அன்பு பெரிதே

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment