Monday, November 7, 2011

அடைப்பைப் பிடுங்காதே!

அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும். - (பிரசங்கி 10:8ம் வசனத்தின் பின்பகுதி).

சீன பெரிய மதில் சுவர் (Great wall of China) உலக அதிசயங்களில் ஒன்றாகும். அது 4000 மைல்கள் நீளமுள்ளதாகவும், வட புறத்திலிருந்து வரும் தாக்குதலுக்கு சீனாவை தப்புவிப்பதற்காக கட்டப்பட்ட ஒரு பாதுகாப்பின் சுவராகும். அதைக் கட்டியவர்கள், அந்தச் சுவரை மிகவும் உயரமாக கட்டியதால், அதன் மேல் யாரும் ஏறிவிட முடியாது. மிகவும் தடிப்பமாக இருப்பதால் அதை ஊடுருவ முடியாதபடியும், மிகவும் நீளமாக கட்டியதால், அதை சுற்றி வர முடியாதவாறும் மிகவும் பாதுகாப்பாக அதை மிகுந்த ஞானத்தோடு கட்டி முடித்தார்கள்.
.
அப்படி பாதுகாப்பாய் கட்டியிருந்தபோதிலும், அது கட்டி முடித்த 100 வருடங்களில் சீனாவை மூன்று முறை எதிரிகள் படைஎடுத்துவந்து தாக்குதல் நடத்தி உள்ளே நுழைந்தார்கள். ஆனால் யாரும் அந்தச் சுவரை தாண்டவோ, உடைக்கவோ இலலை. பின் எப்படி சாத்தியமாயிற்று? அந்தச் சுவரில் பிரச்சனை இல்லை. ஆனால் அதைக் காவல் காத்த வீரர்களுக்கு படை எடுத்து வந்தவர்கள் லஞ்சம் கொடுத்து, அந்த காவலர்கள் கதவுகளை திறந்து விட்டபடியால் அவர்கள் மிகவும் எளிதாக உள்ளே நுழைந்து ஆக்கிரமித்தார்கள்.
.
அந்தச் சுவர் எத்தனை வலிமையாக கட்டப்பட்டிருந்த போதிலும், அதன் பெலன், அதன் கதவை காப்பவர்களின் கைகளிலேயே இருந்தது. நமக்குக்கூட ஆண்டவர் கண்கள், காதுகள், நாவு என்னும் கதவுகளைக கொடுத்துள்ளார். நாம் என்னதான் ஆவிக்குரியவர்களாய் இருந்தாலும், மிகவும் பலமுள்ளவன் என்று நினைத்திருந்தாலும், காணக்கூடாதக் காரியங்களையும், கேட்கக்கூடாத காரியங்களையும், பேசக் கூடாத காரியங்களையும் பார்த்தால், கேட்டால், பேசினால் சத்துரு எப்படியும் உள்ளே நுழைந்து விடுவான். அவனது தந்திரங்களுக்கு நாம் எதிர்த்தது நின்று அவனை ஜெயிக்க வேண்டும்.
.
கர்த்தர் கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரைச் சுற்றிலும் வேலி அடைத்து வைத்திருக்கிறார். சத்துரு உள்ளே நுழையாதபடி நம்மைச் சுற்றிலும் வேலி பாதுகாப்பாய் இருக்கிறது. சுத்துரு எத்தனைதடவை சுற்றி வந்தாலும் அவன் நம்மை வந்த தாக்க முடியாது. ஆனால் நாம் அந்த வேலியை தாண்டி வந்தால், அவர் நம்மை சுற்றி வைத்திருக்கிற அடைப்பை பிடுங்கினால் நிச்சயம் பாம்பு கடிக்கும். அதாவது நாம் பாவம் செய்வோமானால், நம் நாவினாலே, காதுகளாலே, கண்களினாலே தேவையற்ற் காரியத்தில் ஈடுபடுவோமானால் கர்த்தருக்கு பிரியமில்லாத காரியத்தைச் செய்வோமானால், நம்மைச் சுற்றி இருக்கிற வேலியை நாமே எடுத்துப் போட்டு, அடைப்பை பிடுங்கிப் போடுகிறோம். அப்போது சத்துரு மிகவும்எளிதாக உள்ளே நுழைந்துவிட நாம் இடம் கொடுக்கிறோம்.
.
கணவன் மனைவி மாறி மாறி வார்த்தைகளை பேசி சண்டையிட்டுக் கொள்ளும்போது, நாவை சத்துருவுக்கு கொடுத்து விடுகிறோம். நம் வாழ்வில் உள்ள அடைப்பை பிடுங்கி விடுகிறோம். நம் குடும்பம் சத்துருவின் தந்திரங்களுக்கு திறந்துவிடப்பட்டு விடுகிறது.
.
தமிழ் நாட்டில் சீரியல் நாடகங்களுக்கு அடிமைப் பட்டோர் அநேகர். கிறிஸ்தவர்களாயிருந்தாலும், அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பவர்கள் அநேகர் உண்டு. அதைக் கண்டு தங்கள் மருமகள்களை மோசமாக நடத்தும் மாமியார்களும் உண்டு. மருமகள்களும் உண்டு. கணவன் மனைவிக்கும் இடையே வரும் பிரச்சனைகளுக்கும் இந்த நாடகங்கள் சில வேளைகளில் காரணமாய் விடுகின்றன. சில வேளைகளில் அதில் காட்டப்படும் விக்கிரக வழிபாடுகளின் வழியாக சத்துரு வீட்டிற்குள் வரும் அபாயங்களும் உண்டு. நாம் ஜாக்கிரதையாக இவைகளுக்கு விலகி ஜீவிக்க வேண்டும். நாம் காண்கிறதைக் குறித்தும், கேட்பதைக் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீன மதில்சுவர் எத்தனை வலிமையுள்ளதாக இருந்தாலும் அதையும் மீறி எதிரி உள்ளே வர முடியுமென்றால், நாம் நம் வாழ்க்கையை எத்தனை பத்திரமாக காத்துக் கொள்ள வேண்டும்!
.
தேவன் நம் வாழ்வில் கிருபையாக கொடுத்துள்ள வேலியை நாம் எறிந்துப்போட்டுவிடாதபடி, அடைப்பை; பிடுங்கிவிடாதபடி நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் காத்துக் கொள்வோம்.
.
நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
உலகிலே இருக்கும் அவனைவிட
என் தேவன் பெரியவரே

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment