அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை
ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று
தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால்,
தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும்
நற்குணசாலிகளாயிருந்தார்கள். -
(அப்போஸ்தலர் 17:11).
அப்போஸ்தலர் நடபடிகளில் பவுலுடைய பிரயாணங்ககளை
குறித்தும் அவருடைய ஊழிய விபரங்களை குறித்தும் அதிகமாக
கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 17 ஆவது அதிகாரத்தில் பவுல்
தெசலோனிக்கேய பட்டணத்திற்கு சென்று ஊழியம் செய்ததாக
வாசிக்கிறோம். மக்கள் வாஞ்சையோடு கூட சுவிசேஷத்தை ஏற்று
கொண்டனர். பின்பு அங்கு ஏற்பட்ட எதிர்ப்பினால் பவுலை
சகோதரர்கள் அருகாமையிலுள்ள பெரோயா பட்டணத்திற்கு
அனுப்பினார்கள். அங்கும் அவர் பிரசங்கித்தார். அவரது
பிரசங்கத்தை கேட்டு அநேகர் வசனத்தை ஏற்று கொண்டனர்.
.
ஆனால்
இந்த தெசலோனிக்கேய பட்டணத்தாருக்கும், பெரோயா
பட்டணத்தாருக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம்
கூறப்பட்டுள்ளது. அது என்ன? பெரோயா பட்டணத்தார் பவுல்
கூறியது உண்மையா என்று அறியும்படி வேத வசனத்தை
தினந்தோறும் ஆராய்ந்து பார்த்தனர். ஆகவே
தெசலோனிக்கேயர்களை காட்டிலும் இவர்கள் நற்குணசாலிகள்
என்று பரிசுத்த ஆவியானவர் வேதத்தில் எழுதி
வைத்துள்ளார்.
.
அப்போஸ்தலனாகிய பவுல் இயேசு கிறிஸ்துவை முகமுகமாய்
தரிசித்தவர். புதிய ஏற்பாட்டின்அநேக நிருபங்களை
எழுதியவர் அவர். இப்படிப்பட்ட ஒரு பவுலின்
பிரசங்கத்தையும் சரியா தவறா என்று வேத வசனத்தின் மூலம்
அறிய வேண்டுமோ? ஆம், கட்டாயமாக நிதானிக்க வேண்டும். பெரோயா
பட்டணத்தாரின் இந்த காரியமே பரிசுத்த ஆவியானவரின்
பாராட்டுதலை பெற காரணமாயிற்று.
.
பிரியமானவர்களே, இந்த கொடிய வஞ்சம் நிறைந்த கடைசி
நாட்களில் இந்த சத்தியம் மிக முக்கியமானது. ஒரு ஊழியர் பல
இலட்ச மக்களை இரட்சிப்பிற்கு நேராய்
நடத்தியிருக்கிறார் என்ற ஒரே காரியத்திற்காக அவர்
சொல்வதெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் என்று
குருட்டுத்தனமாக நம்பக்கூடாது. ஒரு சுவிசேஷகர் பத்து
பேரை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பியிருக்கிறார்
என்று வைத்து கொள்வோம். நல்லதுதான். ஆனால் அது அவர்
சொல்லும் சத்தியங்களெல்லாம் உண்மையென்று கொள்வதற்கு
ஆதாரமல்ல. அவர் கூறும் பிரசங்கம் வேத வசனத்திற்கு ஒத்ததா
என்று நிதானிக்கும் பக்குவம் நமக்கு கண்டிப்பாக
வேண்டும்.
.
மத்தேயு 24:24ல் 'கள்ள தீர்க்கதரிசிகள்
எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும்
வஞ்சிக்கத்கக் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும்
செய்வார்கள்' என்று இயேசு கிறிஸ்து கூறினார். எவ்வளவு ஒரு
முக்கியமான ஒரு எச்சரிக்கை பார்த்தீர்களா, ஒரு ஊழியர்
ஒரு சரியான தீர்க்கதரிசனம் சொல்லிவிட்டால்
கண்மூடித்தனமாக முழுமையாக நமபும் தன்மையுள்ளவர்களாக
நாம் காணப்படுகிறோம். இது தவறு. ஒரு ஊழியரின் பிரசங்கமும்,
எழுத்துக்களும் வேத வசனத்திற்கு முரணாக இருக்கும்
பட்சத்தில் அதை ஏற்று கொள்ள வேண்டிய அவசியமுமில்லை. அதை
குறித்து கலங்கவும் தேவையில்லை.
.
இப்படி சத்தியங்களை நிதானிக்க வேண்டுமென்று
சொல்லும்போது, எதை வைத்து நிதானிப்பது? வேத வசனத்தை
வைத்து தான். ஆகவே முழு வேதத்தையும் நீங்கள் அடிக்கடி
வாசித்து முடிக்காவிட்டால், எந்த ஒரு சத்தியத்தையும்
தெளிவாக நிதானிக்க முடியாது. வேத வசனம் தெரியாதவர்களை
வாசிக்காதவர்களை மிக எளிதாக ஏமாற்றி விட முடியும்.
கர்த்தர் சொன்னார் என்று சொல்லி, நம்ப வைக்க முடியும்.
ஆகவே வேதத்தை தினமும் வாசித்து, பெரோயா பட்டணத்து
விசுவாசிகளை போல எந்த ஒரு தீர்க்கதரிசனத்தையும், எந்த
ஒரு புது சத்தியத்தையும் வேத வசனத்தோடு நிதானிக்க பழகி
விட்டால் நீங்கள் கர்த்தரால் நற்குணசாலிகள் என்று
புகழப்படுவீர்கள். சத்துருவின் வஞ்சகங்களுக்கு உங்களை
காத்து கொள்ள முடியும். ஆமென் அல்லேலூயா!
.
வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
நன்கு புரியும்படி
தேவனே எனது கண்களையே
தினமும் திறந்தருளும்
..
நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
தீபமே உம் வசனம்
செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே
தேவனே உம் வாக்கு
0 comments:
Post a Comment