உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்'. - (1பேதுரு 1:15).
நாம் ஒரு பாதையில் நடந்து கொண்டிருக்கிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். வழியில் ஒரு பெரிய பாதாள குழி வெட்டப்பட்டிருக்கிறது. கொஞ்சம் இருட்டாக இருந்தபடியால் நாம் பார்க்காதபடி அதில் விழுந்து விடுகிறோம். அதிலிருந்து வெளியே வர மிகவும் முயற்சித்து பின் எப்படியோ வெளியே வந்து விடுகிறோம். இது நம்முடைய தவறு அல்ல. அதை போலத்தான் நாம் பாவத்தில் விழும்போதும், நம்மை அறியாமல் நமக்கு சத்துருவானவன் வைத்திருக்கிற வலையில் விழுந்து விடுகிறோம். அது நமது தவறல்ல என்றாலும், அதிலிருந்து நாம் கஷ்டப்பட்டு வெளியே வந்து விட வேண்டும். அதிலேயே விழுந்து கிடக்கக்கூடாது.
.
அடுத்த நாள் திரும்பவும் அந்த வழியே செல்லும்போது, அந்த குழியை பார்க்கிறோம். நாம் திரும்பவும் விழுந்து போகிறோம். மீண்டும் கஷ்டப்பட்டு வெளியே வருகிறோம். இதுவும் நமது தவறு அல்ல. ஒரு தடவை தான் விழுந்தோம், நேற்று வெளியே வர கஷ்டப்பட்டோமே என்று நாம் நினைப்பதில்லை, திரும்பவும் அதிலே விழுந்து விடுகிறோம். ஏனெனில் ருசி கண்ட பூனையை போல, பாவத்தின் ருசி நம்மை விழ வைத்து விடுகிறது
.அடுத்த நாள் திரும்பவும் அந்த வழியே வருகிறோம். திரும்ப அந்த குழியில் விழுகிறோம். இப்போது அது பழக்கமாகிவிட்டது. நமக்கு அங்கு குழி இருக்கிறது என்று தெரிந்தும் நம் கண்கள் திறக்கப்பட்டும், போய் நாம் விழுந்தோமானால் அது நமது தவறாகும். எப்படியோ சீக்கிரமாய் வெளியே வந்து விடுகிறோம். இப்போது பாவத்தில் விழுவது வாடிக்கையாகி விட்டது. வெளியே வருவதற்கும் பிரியமில்லாமல் விழுந்து விழுந்து எழுவது பழக்கமாகி விடுகிறது. இப்படி பழகி விட்டால் பாவத்திலிருந்து வெளியேறுவது மிகவும் கடினமே.
.
தேவன் நம்மை அதற்காக அழைக்கவில்லை. விழுந்து விழுந்து எழுந்து நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் எழுந்தரிப்பான் என்ற வசனத்தையே சொல்லி கொண்டு விழுந்து எழுந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்காக நாம் கர்த்தரால் அழைக்கப்படவில்லை. 'நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படியே இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்' (1 பேதுரு 1:14-15) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. முன்னே நம்முடைய அறியாமையினாலே விழுந்தோம். ஆனால் நாம் அப்படியே விழுந்து கிடக்கிறது தேவனுடைய சித்தமல்ல, அவர் பரிசுத்தராய் இருக்கிறது போல நாமும் பரிசுத்தமாய் ஜீவிப்பதே அவருடைய சித்தமாயிருக்கிறது.
.
அடுத்த நாளும் அந்த தெருவின் வழியே செல்கிறோம், குழியும் இருக்கிறது. ஆனால் அந்த குழியை சுற்றி நடந்து, விழாமல் பாதுகாத்து கொள்கிறோம்.
.
அடுத்த நாள் அந்த தெருவின் வழியாக செல்லாமல், வேறு தெருவின் வழியாக செல்ல ஆரம்பித்து விடுகிறோம். இதுவே நாம் அந்த குழியில் விழாதபடி நம்மை காத்து கொள்வதற்கு ஏற்ற வழியாகும். நமக்கு அந்த வழியில் சென்றால் பாவத்தில் விழுந்து விடுவோம் என்று தோன்றினால், அந்த வழியாக செல்லாமல், வேறு வழியாக செல்வதே நம்மை பாதுகாத்து கொள்ளும்படியான வழியாகும்.
.
இயேசுகிறிஸ்துவின் வருகை சமீபமாயிக்கிறது. நாம் பாவத்தில் புரண்டு கொண்டிருப்போமானால், திருடனை போல இருக்கும் அவருடைய வருகையில் கைவிடப்பட்டு போய் விடுவோம். அவர் பரிசுத்தமாய் இருப்பது போல நாமும் நம்மை பரிசுத்தமாய் காத்து கொள்வோமானால் அவருடைய வருகையில் நிச்சயமாய் நாம் எடுத்து கொள்ளப்படுவோம் என்பதில் சந்தேகமேயில்லை.
.
பாவம் செய்யாதபடி பாதுகாத்து கொள்ள வேண்டியது நம்முடைய செயலாகும். தேவன் என்னை பாதுகாத்து கொள்வார் என்று நாம் நம்மை காத்து கொள்ளாமல் போனால் நிச்சயமாய் விழுந்து போவோம். நாம் விழுந்து போகும்படி சத்துருவானவன் நமது கால்களுக்கு எப்போதும் வலையை விரிக்கிறவனாகவே இருக்கிறான். ஆனால் நாம் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்கும்போது, அவனது கண்ணிகளுக்கு தப்பி நடக்க முடியும். நாம் அதற்காக முதலடி எடுத்து வைக்கும்போது, கர்த்தர் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கான கிருபைகளை தருவார். நாம் முதலடியே எடுத்து வைக்காமல், பாவத்தில் ருசித்து ரசித்து வாழ்ந்து கொண்டிருப்போமானால், நிச்சயமாகவே கிறிஸ்துவின் வருகையில் கைவிடப்பட்டவர்களாய் போய் விடுவோம். பாவம் நம்மை கறைப்படுத்தாதபடி நம்மை காத்து கொள்வோம். கர்த்தர் நமக்கு முழு வெற்றியை தருவார். ஆமென் அல்லேலூயா!
.
உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
என்னைத் திருத்த வேண்டும் தேவா
கருத்தோடு உமது வசனம்
கற்றுத் தந்து நடத்த வேண்டும்
..
மகிமை, மாட்சிமை மாவேந்தன் உமக்கே
துதியும் கனமும், தூயோனே உமக்கே
0 comments:
Post a Comment