மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.- (கொலேசேயர். 3:18-10).
.
ஒரு கணவனும் மனைவியும் திருமண ஆலோசகரிடம் தங்கள் திருமணத்தின் பிரச்சனைகளைக் குறித்து ஆலோசனைப் பெற சென்றிருந்தனர். அவரிடம் அமர்ந்த மாத்திரத்தில், இருவரும் ஒரே நேரத்தில் ஒருவர் மேல் இருக்கும் குறைபாடுகளைக் குறித்து, விடாமல் பேச ஆரம்பித்தனர். ஒருவர் மேல் ஒருவர் குற்றம்சாட்டி, பேசிக் கொண்டேஇருந்தனர். அதை பொறுமையோடுக் கேட்டுக் கொண்டிருந்த ஆலோசகர், முடிவில், ‘இப்போது நீங்கள் மற்றவர்களிடம் கண்ட நல்ல குணங்களைப் பற்றிக் கூறுங்கள்’ என்றார். இருவரும் மௌனமாக இருந்தனர்.
.
சிறிது நேரம் கழித்து அவர் இருவரிடமும் ஒரு வெள்ளைத்தாளையும் ஒரு பேனாவையும் கொடுத்து, ‘ஏதாவது ஒரு சில நல்ல குணங்களையாவது இந்தத் தாளில் எழுதுங்கள்’ என்றுக் கூறினார். அப்போதும் இருவரும் பேசாமல் இருந்தனர். வெகு நேரம் கழித்து, கணவன் அந்தத் தாளில் ஏதோ எழுத ஆரம்பித்தார். உடனே மனைவியும் வீறாப்பாக, வேகமாக எதையோ எழுத ஆரம்பித்தாள். கடைசியில் இருவரும் எழுதுவதை நிறுத்தினர். மனைவி தான் எழுதிய தாளை அந்த ஆலோசகரிடம் தள்ளினாள். அப்போது அவர், ‘இல்லை, நீங்களே உங்கள் கணவரிடம் கொடுங்கள்’ என்றார். அரைமனதுடன் அந்தத்தாளை கணவரிடம், பாதி கையை நீட்டிக் கொடுத்தாள். கணவரும் தன் தாளை அவளிடம் கொடுத்தார்.
.
இருவரும் வாசிக்க ஆரம்பித்தனர். அப்போது மனைவியின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. அவள் அந்த தாளை தன் இருதயத்தோடு வைத்து, அழ ஆரம்பித்தாள். தன் கணவன் தன்னைப் பற்றி இந்த அளவு நல்லதாக அறிந்து வைத்திருக்கிறாரே என்று நினைத்து, அவளால தாங்க முடியவில்லை. அந்த சூழ்நிலையின் இறுக்கம் மாற ஆரம்பித்தது. இருவரும் சந்தோஷமாக அந்த இடத்தை விட்டுச் சென்றனர். பாராட்டுதல் எத்தனையோ புண்களை ஆற்றிவிடும்.
.
திருமண வாழ்க்கை என்பது, ஏதோ இருவர் சேர்ந்து வாழும் வாழ்க்கை எனபதல்ல, இருவரும் ஒன்றிணைந்து வாழும் வாழ்க்கையாகும். ‘இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்’ - (ஆதியாகமம் 2: 24). இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று வேதம் கூறுகிறது. இன்று அநேக குடும்பங்களில் அதை மறந்து, கணவன் யாரோ மனைவி யாரோ என்று ஒருவருக்கொருவர் வாக்குவாதங்கள் செய்துக் கொண்டு, தங்கள் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் ஒரு வார்த்தை பேசினால் மற்றவர் பத்து வார்த்தை, மற்றவர் பத்து வார்த்தை என்றால், அடுத்தவர் 20 வார்த்தை. இதற்கு முடிவுதான் என்ன? எத்தனைப் பேர் வந்தாலும் தீர்க்க முடியாத பிரச்சனைகள்!
.
கர்த்தர் இதற்காகவா இவர்களை சேர்த்து வைத்தார்? “மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்” என்று வேதம் அறிவுரைக் கூறுகிறது. ஆனால், மனைவி கீழ்ப்படிவது கிடையாது. புருஷர் அன்புக் கூறுவதுக் கிடையாது. அப்புறம் எப்படி, வாழ்வு இனிக்கும்? கல்யாணமாகி 20 வருடங்களானாலும், மனைவியின் குடும்பத்தை இழிவாகக் கூறும் கணவன், அதற்கு சூடாக பதிலை வைததிருக்கும் மனைவி, பிள்ளைகள் பார்க்கிறார்களே என்கிற ஞானம் கூட இல்லாத தம்பதியர் சண்டைகள், இதில் தேவன் எப்படி மகிமையடைவார்?
.
இதற்கெல்லாம் முடிவுதான் என்ன? சாகும்வரை இப்படித்தான் இருக்கப் போகிறார்களா? ஒரே ஒரு முடிவுதான் உண்டு! அது கணவனும் மனைவியும் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டும். இரட்சிக்கப் பட்டிருந்தால் சண்டையே இல்லையா? என்றுக் கேட்கிறவர்களின் கேள்வி காதில் விழுகிறது. சண்டை வந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சூரியன் அஸ்தமிக்குமுன் இருவரும் ஒன்றாகி விடுவார்கள். அதுதான் வித்தியாசம்!
.
கணவர்களே! உங்கள் மனைவியை பாராட்டி பேசுங்கள்! அதில் அவர்கள் மயங்கி விடுவார்கள். மனைவிகளே, உங்கள் கணவர்களை கோபப்படுத்தாதீர்கள். தேவையில்லாத பிரச்சனைகளை வேலை முடிந்து வரும்போது பேசி அவருடைய மூடை கெடுத்து, பின் அழுது புலம்பி, சண்டையிடாதீர்கள்! சந்தோஷமாயிருங்கள்! ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மன்னியுங்கள். மன்னித்து மறந்து விடுங்கள். 20 வருஷம் கழித்தும் அதைக் குறித்துப் பேசி புண்படுத்தாதீர்கள்! தவறாமல் ஒவ்வொரு நாளும் குடும்ப ஜெபம் செய்யுங்கள். முப்புரி நூல் சீக்கிரம் அறாது (பிரசங்கி. 4:12) கணவனும் மனைவியும் தேவனும் சேர்ந்த முப்புரி நூல் சீக்கிரம் அறாது. தேவனை தலைவராகக் கொண்டு, வாழ்வு நடத்தும் குடும்பம் எந்த புயல் வந்தாலும் அசையாது. ஆமென் அல்லேலூயா!
.
நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்
உம்க்காய் வாழுவோம் உம் நாமம் சொல்லுவோம்
0 comments:
Post a Comment