இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.
- (வெளிப்படுத்தின விசேஷம் 16:15).
இந்த வசனத்திற்கு அநேக வியாக்கியானங்கள் இருக்கிற போதிலும், இஸ்ரவேலில் வழங்கப்பட்டு வந்த காரியம் இந்த வசனத்தின் அர்த்தத்திற்கு ஒத்துப் போவதால், இதை இங்கே எழுதுகிறேன். எருசலேமில் தேவாலயம் இருந்த நாட்களில் லேவியர்கள் அந்த ஆலயத்தை பரிசுத்தமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவர்களது வேலையாகும். ஆகையால் அவர்களின் தலைவன், முழு இரவும் பாதுகாப்பு ஒழுங்காக மற்றவர்கள் செய்கிறார்களா என்று கண்காணிப்பது வழக்கம். அதை அழுக்காகாதபடிக்கு அதைக் காக்க வேண்டியது, அங்கு ஜாமக்கார லேவியனின் பொறுப்பில் இருந்து வந்தது. எந்த ஜாமக்காரனாவது இரவில் களைப்பின் மிகுதியால் தூங்கிவிட்டால், அவர்களின் தலைவன் வந்து கண்காணிக்கும் நேரத்தில், அவனை தூங்குகிறவனாக கண்டால், அந்தக் ஜாமக்காரனை அடித்து, அவனுடைய துணிகளை உரிந்து, அவற்றை நெருப்பில் போட்டுவிடுவான். அப்போது அந்தக் காவல்காரன் துணியில்லாமல், நிருவாணமாகத்தான் தன் வீட்டிற்கு செல்ல வேண்டும். இதைத்தான் உவமையாக இயேசுகிறிஸ்து தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றுக் கூறிகிறார்.
.
இயேசுகிறிஸ்து சீக்கிரம் வரப் போகிறார். அதற்கான அடையாளங்கள் வெகு விரைவாக நடந்தேறி வருகின்றன. இதோ திருடனைப் போல் வருகிறேன் என்றுச் சொன்னவர் சீக்கிரம் வந்துவிடுவார். ஆனால் நாம் ஆயத்தமா?
.
ஒவ்வொரு கிறிஸ்தவரும் இந்நாட்களில் ஜாமக்காரன்தான். கர்த்தருடைய வருகைக்கு விழித்திருந்து காத்திருக்க வேண்டியது நமது கடமை. அவர் வரும்போது நமது இரட்சிப்பின் வஸ்திரத்தில் கறை இருந்தால் அவரோடு போவது இயலாத காரியம். ஆகவே நம் வஸ்திரத்தை கறையில்லாதபடி காத்து, திருடனைப் போல் இருக்கப் போகும்; அவரது வருகைக்கு நாம் எப்போதும் ஆயத்தமாயிருக்க வேண்டும். தேவாலயத்தைக் காத்த அந்த காவல்காரன் தூங்கிவிட்டால், எப்படி தண்டனையோ, அதேப் போல நாமே தேவாலயம், இந்த சரீரத்திலும் எந்த அழுக்கும் இல்லாதபடி காத்துக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும். அப்படி காத்துக் கொள்ளாதப் பட்சத்தில் நம் வஸ்திரங்கள் இல்லாமல் இருக்கும் நிலைமைக்கு தள்ளப்படுவோம். அதாவது, இரட்சிப்பின் வஸ்திரம் இல்லாமல் நாம் பரலோக ராஜ்ஜியம் சேர முடியாது. இதை நாம் இயேசுகிறிஸ்து கூறின ஒரு உவமையில் காணலாம், ‘விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்த போது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.’ அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்(மத்தேயு 22:11-13). ஆகவே ஜாமக்காரராய் நாம் நம் வஸ்திரம் கறைப்படாமல் பத்திரமாய்க காத்துக் கொள்வோம். இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார். ஆமென்! மாரநாதா! இயேசுகிறிஸ்துவே வாரும்.
.
திருடனைப் போல் அவர் வருகை
தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
அழுது புலம்பி கதறுவாரே
0 comments:
Post a Comment